Published : 21 Apr 2024 02:00 PM
Last Updated : 21 Apr 2024 02:00 PM
புதுடெல்லி: “பாஜக நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது பிரதமர் நரேந்திர மோடியை வழிபடும் தளமாக மாறியுள்ளது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் (ஏப்., 21) இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. இதை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர் ஆனால் இது மிகப்பெரிய பிரச்சினை. எனது அனுபவத்தில் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இருந்ததே கிடையாது. பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பட்டதாரிகளின் வேலையின்மை 42 சதவீதமாக உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றிபெறும். அதேபோல், வரக்கூடிய 26ம் தேதி கேரளாவில் நடைபெற உள்ள மொத்தமுள்ள 20 மக்களவைக்கான தேர்தலிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறேன்; வெற்றிபெற வைக்க வேண்டும் என கேரள மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
பாஜக 14 நாட்களில் தேர்தல் அறிக்கையை உருவாக்கியது. தேர்தல் அறிக்கை என்று அதற்கு பெயரிடப்படவில்லை. அதை மோடியின் உத்தரவாதம் என்கிறார்கள். பாஜக நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அந்த வழிபாடு பிரதமர் நரேந்திர மோடியை வழிபடும் வழிபாடாக மாறியுள்ளது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப்பெற தொடங்கியதும், சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும்.
மோடி மீண்டும் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை திருத்தலாம். 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் இணைந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக எதும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அது ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT