Published : 21 Apr 2024 05:27 AM
Last Updated : 21 Apr 2024 05:27 AM
ஹைதராபாத்: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர் ரேவந்த் ரெட்டி. சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனது தொகுதி மட்டுமல்லாது மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 24 மணி நேரமும் சூறாவளி பிரச்சாரம் செய்து, காங்கிரஸை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற அவர் காரணமாக அமைந்தார். அதனால், பல மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தும், ரேவந்த் ரெட்டிக்கு, காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பதவி கொடுத்தது. இதனால், ரேவந்த் ரெட்டிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
வரும் மே 13-ம் தேதி தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக சமீபத்தில் ‘டைம்ஸ் நவ் குரூப்’ சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு பேசியபோது அவர் தெரிவித்த கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இண்டியா கூட்டணி ஏற்கவில்லை: இதற்கு ரேவந்த் ரெட்டி பதிலளித்தபோது, ”உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது.அது அவரின் தனிப்பட்ட சிந்தனை. சனாதன தர்மம் குறித்த கருத்துக்காக நிச்சயம் அவர் தண்டிக்கப்பட வேண்டும். இக்கருத்தை 'இண்டியா' கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகி உள்ளன.பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்பினர் உதயநிதியின் கருத்துக்கு கடும் ஆட்சேபங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT