Published : 20 Apr 2024 03:28 PM
Last Updated : 20 Apr 2024 03:28 PM
நந்தேட் (மகாராஷ்டிரா): “கடந்த முறை அமேதியில் தோற்றது போலவே இந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாட்டிலும் காங்கிரஸின் இளவரசர் தோல்வியைத் தழுவுவார். அதற்கு பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்தை அவர் தேட வேண்டும்” என்று ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடா மற்றும் ஹிங்கோலி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நந்தேடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: “நாட்டில் நேற்று மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்களித்த அனைவருக்கும், குறிப்பாக முதல்முறையாக வாக்களித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றைய வாக்குப்பதிவில் என்டிஏவுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் விழுந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்ததைப் போல காங்கிரஸ் இளவரசர் இந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாட்டிலும் தோல்வியடைவார். ஏப்ரல் 26-க்கு பின்னர் அவர் (ராகுல் காந்தி) வேறு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடவேண்டும். மக்களவைத் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாததால், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு போட்டியிட்டுள்ளார். அந்தக் குடும்பம் (இந்திரா காந்தி குடும்பம்) முதல் முறையாக காங்கிரஸ் வேட்பாளருக்கு இந்த முறை வாக்களிக்கபோவதில்லை. காரணம், அவர்கள் வசித்துவரும் தொகுதியிஸ் காங்கிரஸ் சார்பில் யாரும் இந்த முறை போட்டியிடவில்லை.
முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தீமைகளை சரிசெய்ய 10 வருடங்கள் ஆனது. அதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருந்தது. தற்போது எந்தவிதமான விவசாய சிக்கல்களும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கைகளாலேயே அது நடந்தது.
நாட்டின் எதிர்காலத்தை மக்கள் நம்பி ஒப்படைக்கும் ஒரு முகம் இண்டியா கூட்டணியில் இல்லை. அப்படி ஒருவரை அவர்கள் முன்னிருத்தவும் இல்லை. அவர்கள் எதையும் கூறலாம். ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அனைவரும் தங்களின் ஊழல்களை மறைப்பதற்காகவே சுயநலத்தோடு ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் தங்களின் உரிமையை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும். வாக்களிப்பதன் மூலம் நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கிறீர்கள். இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் கட்டாயம் தோல்வியடைவர். ஆனாலும் உங்களுக்கும் (எதிர்க்கட்சியினர்) ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு நீங்கள் வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
இண்டியா கூட்டணியில் உள்ள கட்சியினர் 25 சதவீத தொகுதிகளில் ஒருவருக்கு எதிராக மற்றவர் போட்டியிடுகின்றனர். ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்ததும் அவர்கள் இன்னும் அதிகமாக தங்களுக்குள் மோதிக் கொள்வார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இல்லை என்றால் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்களின் தலைவிதி என்னவாகியிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்த முறையும் தனிப்பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடியின் தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமையும் என்று என்டிஏ கூட்டணி எதிர்பார்க்கிறது. அதேபோல், 2014 மற்றும் 2019 தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் இந்த முறை ஆட்சியை பிடித்துவிட முடியும் என்று எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.
நாட்டின் 18-வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி வரை இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT