Published : 20 Apr 2024 05:33 AM
Last Updated : 20 Apr 2024 05:33 AM
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ஜோதி ஆம்ஜி. ‘‘பிரிமார்டையல் டுவார்ப்பிஸம்’’ என்று அரிய மரபணு பாதிப்பால் வளர்ச்சி குன்றினார். இவரது உயரம் 62.8 செ.மீ. (2 அடி, முக்கால் அங்குலம்). கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இவர் தனது 18-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போதுதான் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதன் மூலம் உலகளவில் மிகவும் புகழ்பெற்றார். தற்போது 30 வயதாகும் ஜோதி ஆம்ஜி, இந்தியா மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இந்நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு நாக்பூரில் தனது வீட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் ஜோதி நேற்று வாக்களித்தார்.
வாக்குச் சாவடிக்கு அவர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை வந்தார். அப்போது அவரை பார்க்க கூட்டம் கூடியது. சிரித்த முகத்துடன் வாக்களித்த ஜோதி கூறும்போது, ‘‘நாட்டுக்கு எனது கடமையை செய்துள்ளேன். மக்களவை தேர்தலில் நான் வாக்களிப்பது இது 2-வது முறை. ஏற்கெனவே மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 2 முறை வாக்களித்துள்ளேன். வாக்களிக்க வேண்டியது நமது கடமை, உரிமை. நம்முடைய வாக்கின் மூலம் நல்ல தலைவரை நமக்கான பிரதிநிதியை உறுதி செய்ய முடியும்’’ என்று தனது சிறிய விரலை காட்டி சிரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT