Published : 19 Apr 2024 06:05 PM
Last Updated : 19 Apr 2024 06:05 PM
புதுடெல்லி: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) தொகுக்கப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி, “மத்தியப் பிரதேசத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன” என்று பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல்களில் பிரதமர் மோடி யாரைப் பாதுகாக்கிறார்? பாஜக வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில், ஆதிவாசிகளை ஏன் கைவிட்டது? மத்தியப் பிரதேசத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற விகிதங்கள் அதிகளவில் உள்ளது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள அவர், “மத்தியப் பிரதேசத்தில் உள்ள பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் பெயரை அரசாங்கம் மாற்றியிருக்கலாம், ஆனால் 10 ஆண்டுகளாக மாநிலத்தை உலுக்கிய மோசமான “வியாபம் ஊழலை” யாரும் மறக்கவில்லை. அப்போது பள்ளி ஆசிரியர்கள், கான்ஸ்டபிள்கள் மற்றும் வேளாண்மை மேம்பாட்டு அதிகாரிகளின் ஆட்சேர்ப்பில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், பாஜக அரசாங்கம் செய்த அனைத்துக்கும் மறுப்பு தெரிவித்தது. கடந்த ஆண்டுதான், பட்வாரி ஆள்சேர்ப்புத் தேர்வில் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மோசடிகளில் பிரதமர் யாரைப் பாதுகாக்கிறார்? இனி நமது இளைஞர்கள் இது போன்ற அநீதியைச் சந்திக்காமல் இருக்க பிரதமர் மோடி என்ன செய்ய போகிறார்.
பழங்குடி மக்களுக்கு வனத்தின் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸால் வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாஜக அதை அமல்படுத்துவதை தடுத்து கோடி கணக்கான ஆதிவாசிகளின் நன்மைகளைப் பறித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு ஏன் ஆதிவாசிகளின் உரிமைகளை வழங்கத் தவறிவிட்டன?
2021-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற விகிதம் 63.6 ஆக இருந்தது, இது தேசிய சராசரியான 25.3 ஆக இருந்தது. அதே போன்று 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான அதிக குற்ற விகிதங்களை இந்த மாநிலம் பதிவு செய்துள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது வெட்கக்கேடானது.
பாஜக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் உள்ளது. பட்டியலினத்தவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து ஏன் அதிகமாக அஞ்ச வேண்டும்? பட்டியலினத்தவர்கள் அனுபவித்த எண்ணற்ற கொடுமைகளுக்காக பிரதமர் மோடி வெட்கப்படவில்லையா? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT