Published : 19 Apr 2024 01:39 PM
Last Updated : 19 Apr 2024 01:39 PM
புதுடெல்லி: பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த மேற்கு வங்கத்தில், பாஜக - திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையிலான மோதலில் கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் இன்று 3 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் (ஏப்.19) இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.
இந்தத் தாக்குதலில் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாகவும், கல் வீச்சு நடந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த அனந்த் பர்மன் என்ற உள்ளூர் பிரமுகர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தொண்டர்களால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பார்க்க மாநில அமைச்சர் உதயன் குஹா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
வாக்காளர்களை மிரட்டுவதாகவும், வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வரவிடாமல் தடுப்பதாகவும், பூத் ஏஜெண்டுகளைத் தாக்கியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். கூச் பெஹாரில் உள்ள டூஃபங்கஞ்ச் மற்றும் ஜல்பைகுரியில் உள்ள டப்கிராம் - ஃபுல்பாரி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
3 தொகுதிகளில் கூச் பெஹார் தொகுதியில் அதிகளவிலான வன்முறை புகார்கள் எழுந்துள்ளதாக, மேற்கு வங்க ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதோடு, "எங்களுக்கு ஒரு சில புகார்கள் வந்துள்ளன, ஆனால் இதுவரை வன்முறைகள் குறித்து எங்களிடம் எந்த புகாரும் இல்லை. காலை 11 மணிக்கு சராசரியாக 33.56% வாக்குகள் பதிவாகியிருந்தன" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தேர்தல் வன்முறை தொடர்பான புகார்களுக்கு ஹெல்ப்லைன் ஒன்று அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து வாக்குப்பதிவை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கண்காணித்து வருவதாக திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment