Published : 18 Apr 2024 07:11 PM
Last Updated : 18 Apr 2024 07:11 PM
கோட்டயம் (கேரளா): வேலைவாய்ப்பு சந்தைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையே நரேந்திர மோடி ஒரு தடையை உருவாக்கியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “இந்தியா வல்லரசாகும் என நம்மால் எப்படி பேச முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கேரளாவின் கோட்டயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "சில நாட்களுக்கு முன்பு நான், ஒரு ரயில் நிலையத்தில் சிவில் இன்ஜினியராக இருந்த ஒரு போர்ட்டரைச் சந்தித்தேன். தனியார் கல்லூரியில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, நன்கு படித்த இளைஞர் அவர். ஆனால், ரயில் நிலையத்தில் போர்ட்டர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாம் விரும்பும் இந்தியா இது அல்ல.
பயிற்சி உரிமைச் சட்டம் எனும் சட்டத்தை நாங்கள் உருவாக்கப் போகிறோம். டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு வருட தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் அது. இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சியோடு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு சந்தைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையே நரேந்திர மோடி ஒரு தடையை உருவாக்கியுள்ளார். இது கிட்டத்தட்ட உடைக்க முடியாதது. ஆனால், நாம் கொண்டு வர உள்ள திட்டம் அந்தத் தடையை உடைக்கும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமளித்தல், சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் பிரகாசமான, உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு வழி வகுத்தல் எனும் நோக்கோடு காங்கிரஸ் கட்சி, ஐந்து உத்தரவாதங்களை அளித்துள்ளது. இளைஞர்களுக்கான நீதி, பெண்களுக்கான நீதி, விவசாயிகளுக்கான நீதி உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்பு கேரளாவை சற்று தொலைவில் இருந்து பார்த்தேன். இப்போது, இந்த மாநிலத்தின் ஒரு எம்.பி. என்பதால், உங்கள் மாநிலத்தை நான் மிக அருகில் இருந்து பார்க்க வேண்டும்.
நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பாஜகவுடன் போராடுகிறேன். அவர்களின் சித்தாந்தம் மற்றும் அவர்கள் நம் நாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பாஜகவை எப்படி எதிர்த்துப் போராட நான் எழுந்திருக்கும்போது, அதேநேரத்தில் நூற்றுக்கணக்கான பாஜக தலைவர்கள் என்னை எதிர்த்துப் போராட வருகிறார்கள். பாஜகவை எதிர்த்துப் போராடும் எவரும் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். நீங்கள் அவர்களைத் தாக்கும் தருணத்தில், அவர்கள் முழு பலத்துடன் திருப்பித் தாக்குவார்கள்.
இன்று இந்தியாவில் 70 கோடி மக்களின் சொத்து 22 பேரிடம் உள்ளது. இந்தியா வல்லரசாகும் என நம்மால் எப்படி பேச முடியும்? நமது விவசாயிகள் உதவிக்காக கதறுகிறார்கள். நமது இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். நாம் எப்படி வல்லரசாக இருக்கப் போகிறோம்?" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT