Published : 18 Apr 2024 06:15 PM
Last Updated : 18 Apr 2024 06:15 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும், வாக்களிக்க 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள முதல்கட்டத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 102 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 73 பொதுத் தொகுதிகள், 18 எஸ்சி தொகுதிகள், 11 எஸ்டி தொகுதிகள் அடங்கும். 21 மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வாக்களிக்க 16.63 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில், 8.4 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 8.23 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 11,371 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 35 லட்சத்து 67 பேர் முதல்முறை வாக்காளர்கள். 20-29 வயதுக்குள் உள்ள இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.51 கோடி.
முதற்கட்டத் தேர்தலில் ஆயிரத்து 625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களில் 1,491 பேர் ஆண்கள், 134 பேர் பெண்கள்.
வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 18 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்துக்குச் செல்வதற்காகவும், தேர்தல் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காகவும் 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரயில்கள், ஒரு லட்சம் வாகனங்கள் ஆகியவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு வாக்களிக்க முடியும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
தமிழக தேர்தல் களம்: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடி ஆகும். முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் ஒரு லட்சம் போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். 39 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது.
மொத்த வாக்குச்சாவடிகளில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும். பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீஸார் என அனைவரும் பெண்களே. வாக்குச்சாவடி வளாகத்துக்குள் செல்போன் எடுத்துச் சென்றாலும், வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது.
2009-ஆம் ஆண்டில் 73.02 சதவீதம், 2014-ஆம் ஆண்டில் 73.74 சதவீதம், 2019-ஆம் ஆண்டில் 72.47 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT