Published : 18 Apr 2024 05:27 AM
Last Updated : 18 Apr 2024 05:27 AM
குவாஹாட்டி: மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று காலை அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:
இன்று வரலாற்று சிறப்புமிக்க ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் பாலராமர் இறுதியாக தனது பிரம்மாண்ட கோயிலில் அமர்ந்துள்ளார். உலகின் புனிதநகரமான அயோத்தியில் உள்ள பால ராமர் கோயிலில் ராமருக்கு சூரிய திலகம் இட்டு கொண்டாடப்பட்டது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்கு தகுதியான வசதிகளை வழங்க தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும். பாகுபாடின்றி இவை கிடைக்கும்.
70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளேன்.
இன்று நாடு முழுவதும் பிரதமர் மோடியின் உத்தரவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்துக்கு வடகிழக்கு மாநிலங்களே சாட்சியாக உள்ளன.
காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சினைகளை மட்டுமே கொடுக்க முடிந்தது. அங்கு காங்கிரஸ் பிரிவினைவாதத்தை தூண்டியது. அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முயற்சிகளை பாஜக மேற்கொண்டது.
60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்தோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற மந்திரத்தை பின்பற்றும் கட்சிதான் பாஜக.
2014-ல் நம்பிக்கையையும், 2019-ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். 2024-ம் ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன். இது மோடியின் உத்தரவாதம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி பேசி முடித்ததும் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்பினார். அப்போது கூட்டத்தினரும் பதிலுக்கு ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பினர்.
ராமநவமி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ராமநவமி வாழ்த்துகளை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: அசாமில் நல்பாரி பேரணியில் கலந்து கொண்ட நான் டேப் மூலம் (கையடக்கக் கணினி) மூலம் மூலம் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வை கண்டுகளித்தேன். எனது நல்பாரி பேரணிக்குப் பிறகு, ராம் லல்லாவில் சூர்ய திலகத்தைப் பார்த்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த சூர்ய திலகம் நம்வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும். மேலும், இது நமது தேசத்தை பெருமையின் புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கட்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT