Published : 18 Apr 2024 12:01 AM
Last Updated : 18 Apr 2024 12:01 AM
புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட பதிவினை நீக்கும் முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது ஏன் என புதன்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பிரச்சினைகள் அரசு தரப்பை தர்ம சங்கடத்துக்கு ஆழ்த்தியது தான் காரணமா என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரது எக்ஸ் தள பதிவுகளை தேர்தல் ஆணையம் நீக்க சொல்லியதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்துக்காக இந்த நடவடிக்கை என்றும் விளக்கம் தர சொல்லியுள்ளது. இந்த சூழலில்தான் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஸ்ரீநேத், தனது கருத்தை தெரிவித்துள்ளார். “வெறுப்பு பேச்சு தொடர்பான கருத்துகள், மதம் சார்ந்த பதிவுகள் மற்றும் அவதூறு அறிக்கைகள் போன்ற பதிவுகளை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
இந்த சூழலில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பிய ட்வீட்டை தேர்தல் ஆணையம் நீக்க சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பதிவு அரசு தரப்புக்கு சங்கடத்தை கொடுத்தது தான் நீக்கப்பட காரணமா?
மத்தியில் ஆளும் அரசுக்கு சமூக வலைதளங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் போன்றவை கசப்பான உணர்வை தருகிறது. ஏனெனில், இதில் வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, குற்ற செயல்களுக்கான நீதி மற்றும் நம் நாட்டு விளையாட்டு வீரர்கள் குறித்து எழுப்பப்படும் பிரச்சினைகள் திரளான பயனர்களை சென்றடைகிறது. அது அரசுக்கு அசௌகரியத்தை தருகிறது.
தேர்தல் பத்திர விவகாரத்தில் தன்னால் முடிந்தவரை பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறார். பாஜகவுக்கு தேர்தல் பத்திர நன்கொடை அளித்தவர்கள் ஆதாயம் ஈட்டும் வகையில் அரசு ஒப்பந்தங்களை பெறுகின்றனர்.
அதே போல அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை போன்ற அமைப்புகளின் சோதனைகளை நிறுத்தும் வகையிலும் சிலர் பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நன்கொடை வழங்கியுள்ளனர்.
எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சொன்னது போல பிரதமர் மோடி ஊழல்களின் சாம்பியன் தான். தேர்தல் பத்திரம் மூலம் அதனை அவர் அதிகரிக்க செய்துள்ளார்” என சுப்ரியா தெரிவித்துள்ளார்.
2020 மற்றும் 2021-ல் விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிய போது விவசாய சங்கங்கள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் சுயாதீன பத்திரிகையாளர்களின் சமூக வலைதள கணக்குகளை முடக்கியது தொடர்பாகவும் சுப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT