Published : 17 Apr 2024 05:51 PM
Last Updated : 17 Apr 2024 05:51 PM

சிஏஏ ரத்து முதல் 10 இலவச சிலிண்டர்கள் வரை: திரிணமூல் காங். தேர்தல் அறிக்கை அம்சங்கள்

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. அக்கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, “பாஜக ஜமீன்தார்களை தூக்கி எறிந்துவிட்டு, அனைவருக்குமான கண்ணியமான வாழ்க்கைக்கு வழி வகுப்போம்” என்று முழங்கினர். திரிணமூல் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள்:

  • வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 நாள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கப்படும். மேலும் அனைத்து தொழிலாளர்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 பெறுவார்கள்.
  • அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் இலவச வீடு.
  • வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
  • அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வீட்டு வாசலில் இலவச ரேஷன் விநியோகம்
  • பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படும்.
  • முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் (ஆண்டுக்கு ரூ.12,000)
  • சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தப்படும்.
  • பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களின் மலிவு விலை உறுதி செய்யப்படும்
  • 25 வயது நிரம்பிய அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா படித்தவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
  • சிஏஏ ரத்து செய்யப்படும்.
  • என்ஆர்சி நிறுத்தப்படும்
  • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது.

நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் மக்களவைத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 தொகுதிகள் இருக்கிறது. அங்கு மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 42 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகின்றன. அதேபோல பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகின்றன. இது தவிர இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துக் களமிறங்குகின்றன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. பெங்காலி, ஆங்கிலம், இந்தி மற்றும் உருது உள்ளிட்ட ஆறு மொழிகளில் திரிணமூல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அசாமில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து சில்சார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. அவர்கள் (பாஜக) ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக ஆக்கிவிட்டனர். இதுபோன்ற ஆபத்தான தேர்தலை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை. இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), பொது சிவில் சட்டம் ஆகியவை இருக்காது. அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் நாங்கள் ரத்து செய்வோம்” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x