Published : 17 Apr 2024 04:15 PM
Last Updated : 17 Apr 2024 04:15 PM
பெங்களூரு: சமூக வலைதளங்களில் ‘ஆங்கிரி ரான்ட்மேன்’ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் யூடியூபர் அப்ரதீப் சாஹா பல்வேறு உறுப்புகள் செயலிழப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 27.
சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இதயவால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் ஐசியுவில் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு உறுப்புகள் செயலிழப்பால் இன்று காலமானார். அவரது ரசிகர்களும், சக யூடியூபர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த அப்ரதீப் சாஹா? - ‘ஆங்கிரி ரான்ட்மேன்’ என்ற யூடியூப் பக்கத்தில் 4.82 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்களை கொண்டிருப்பவர் அப்ரதீப். கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகரான இவர், ஃபுட்பால் குறித்த அலசல்களை வீடியோவாக பதிவேற்றியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். மேலும், கிரிக்கெட் குறித்தும் பேசி வீடியோக்களை பதிவேற்றி வந்தார்.
அவரை பெரிய அளவில் கவனம் ஈர்க்க வைத்தது, அவரின் உரக்க சத்ததத்துடன் கூடிய சினிமா விமர்சனம்தான். கத்தி பேசி படங்களை விமர்சனம் செய்யும் அவரது பாணி ரசிகர்களை கவர்ந்தது. அண்மையில் கூட அவர், ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஷைத்தான்’ படங்களுக்கு விமர்சனங்களைப் பதிவேற்றியிருந்தார். இந்நிலையில், அவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT