Published : 17 Apr 2024 12:28 PM
Last Updated : 17 Apr 2024 12:28 PM
புதுடெல்லி: ‘ஆம் ஆத்மியின் ராம ராஜ்ஜியம்' என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சி புதிய இணையதளத்தைத் தொடங்கி உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ராம நவமியை முன்னிட்டு https://aapkaramrajya.com/ என்ற புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.
கேஜ்ரிவால் அரசின் பணிகளை முன்னிலைப்படுத்த ஆம் ஆத்மி கட்சி ‘ஏஏபி கா ராம் ராஜ்யா’ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேசிய தலைநகரில் ராமரின் லட்சியங்களை உணர முயற்சிப்பதாகக் கூறி, "ராம் ராஜ்ஜியம்" என்ற கட்சியின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி தனது "ஏஏபி கா ராம்ராஜ்யா" இணையதளத்தை புதன்கிழமை தொடங்கியது. ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் இணையதளத்தைத் தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசினர்.
“கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் டெல்லியில் மூன்றுமுறை ஆம் ஆத்மி அரசை அமைத்துள்ளோம் என்பது மட்டுமல்ல, பஞ்சாபிலும் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளோம். கேஜ்ரிவால் தலைமையில் டெல்லியிலும், பகவந்த் மான் தலைமையில் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. நாங்கள் செய்துள்ள பணிகளை மக்களுக்குத் தெரிவிக்கவும், ராம ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கனவின் உறுதியை வெளிப்படுத்தவும் இந்த இணையதளத்தைத் தொடங்கி உள்ளோம்
ராம ராஜ்ஜியம் குறித்த எங்கள் கனவை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த இணையதளத்தை அவசியம் காண வேண்டும். டெல்லியிலும், பஞ்சாபிலும் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் பிறகு நீங்கள் எங்களோடு இணையலாம்” என சஞ்சய் சிங் தெரிவித்தார்.
டெல்லி அமைச்சர் அடிஷி பேசுகையில், “ராம சரித மானஸ் காப்பியம் தந்த உந்துதல் காரணமாகவே டெல்லி மற்றும் பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனது அரசு கடந்த 9 ஆண்டுகளாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என கேஜ்ரிவால் கூறி இருக்கிறார். ராம ராஜ்ஜியம் குறித்த நிறைவை மக்கள் பெறுவதற்காக ராமர் கடுமையான சவால்களை எதிர்கொண்டார். 14 ஆண்டுகள் வனத்துக்குச் சென்றார். ஆனாலும், அவர் தனது வாக்குறுதியை மீறவில்லை. கேஜ்ரிவாலும் அதே கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT