Published : 17 Apr 2024 05:02 AM
Last Updated : 17 Apr 2024 05:02 AM

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை: 29 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்ட வனப் பகுதியில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர். (உள்படம்) உயிரிழந்த மாவோயிஸ்ட் கமாண்டர் சங்கர் ராவ்.

கான்கெர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் சங்கர் ராவ் உட்பட 29 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர், பிஜப்பூர், தண்டேவாடா, கான்கெர், கொண்டாகான், நாராயண்பூர், ராஜ்நந்த்கான், சுக்மா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, இந்த 10 மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்தும் சிறப்பு படையினருடன், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள கான்கெர் மக்களவை தொகுதியில் வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கான்கெர் மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் சோட்டேபெத்தியா காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் பினகுண்டா கிராமத்தின் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் மாவோயிஸ்ட் கமாண்டர்கள் சங்கர் ராவ், லலிதா, ராஜ்மன், வினோத் காவ்டே உட்பட பலர் பங்கேற்றுள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டைக்காக கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாநில போலீஸாரின் மாவட்ட ரிசர்வ் படையினர் (டிஆர்ஜி), எல்லை பாதுகாப்பு படையினர் சுமார் 200 பேர் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணிஅளவில் இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்ட் கமாண்டர்கள் சங்கர் ராவ், லலிதா, வினோத் காவ்டே உட்பட 29 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.

இதில், மாவோயிஸ்ட் தலைவர் சங்கர் ராவ், லலிதா ஆகியோரது தலைக்கு ரூ.25 லட்சமும், வினோத் காவ்டே தலைக்கு ரூ.10 லட்சமும் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த துப்பாக்கி சண்டையில் வீரர்கள் தரப்பில் 3 பேர் காயம் அடைந்தனர். ஒரு வீரருக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த வீரர்களில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. டிஆர்ஜி படையை சேர்ந்த ஒரு வீரர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

காயம் அடைந்த வீரர்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. ஆனால், வனப் பகுதியில் தரையிறங்க முடியாமல் அந்த ஹெலிகாப்டர் திரும்பி வந்தது. இதனால், காயம் அடைந்த வீரர்களுக்கு வனப் பகுதியிலேயே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர், வீரர்களை மீட்க இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதிகளுடன், மற்றொரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.

மாவோயிஸ்ட்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், 303 ரைபிள்கள், கார்பைன் ரக துப்பாக்கிகள், ஏகே-47 மற்றும் எஸ்எல்ஆர், இன்சாஸ் ரக துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கான்கெர் மாவட்டத்தில் துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது என்று மாவட்ட எஸ்.பி. கல்யாண் எலேசலா தெரிவித்தார். இது சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் நடந்துள்ள பெரிய அளவிலான என்கவுன்ட்டர் என பஸ்தர் ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

கான்கெர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த என்கவுன்ட்டரில் ஒரு மாவோயிஸ்ட், ஒரு வீரர் உயிரிழந்தனர். அப்போதும் ஆயுதங்கள், வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். கடந்த 4 மாதத்தில் கான்கெர் மாவட்டத்தில் மொத்தம் 72 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு உயிரிழந்த மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கையைவிட மிக அதிகம்.

சத்தீஸ்கரில் கடந்த நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோதும், கான்கெர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x