Published : 17 Apr 2024 06:27 AM
Last Updated : 17 Apr 2024 06:27 AM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை நாங்கள் தீவிரவாதி என்று அழைக்கவில்லை. அவரை ஊழல் செய்தவர் என்றுதான் அழைக்கிறோம் என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்தார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் கேஜ்ரிவாலை தீவிரவாதிகள் போல டெல்லி சிறையில் நடத்துகின்றனர் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
திஹார் சிறையில் இருந்தாலும் கூட அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி மக்களுக்காகவே உழைத்து வருகிறார். கேஜ்ரிவால் டெல்லி மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதை நான் உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன்.
அவர் அனுப்பியுள்ள செய்தியில் என் பெயர் அர்விந்த் கேஜ்ரிவால், நான் தீவிரவாதி அல்ல. நீங்கள் இப்படி நடந்துகொள்வதற்கு வெட்கமாக இல்லையா? மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்களை நான் சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை. கண்ணாடி ஜன்னல் வழியாகவே சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதற்காக கேஜ்ரிவால் மீது இந்த அளவுக்கு வெறுப்பு என தெரியவில்லை.இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.
இதுகுறித்து டெல்லி எம்.பி.யானமனோஜ் திவாரி அளித்துள்ள விளக்கம்: கேஜ்ரிவாலை யார் தீவிரவாதி என்று அழைத்தது? கேஜ்ரிவாலையும், அவரது சகாக்களையும் தீவிரவாதிகள் என்று ஏன் அழைக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவரை ஊழல்வாதி என்றுதான் அழைத்தோம். அவர் டெல்லியின் எதிரி.
பென்ஷனுக்காக முதியோரை அழ வைத்தவர்தான் இந்த கேஜ்ரிவால். ரேஷன் கார்டுகளுக்காக ஏழை மக்களை கதற வைத்தவர். சுத்தமான காற்றுக்கும், தண்ணீருக்கு மக்களையும் குரலெடுத்து அழ வைத்தவர்தான் அர்விந்த் கேஜ்ரிவால்.
ஊழல் செய்வதற்கு முன்பு சிறையில் உள்ள வசதிகள், பிரச்சினைகள் குறித்து ஆம் ஆத்மி தலைவரான கேஜ்ரிவால் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறை விதிகள் அனைவருக்கும் பொதுவானவைதான். சட்டம் தனது கடமையைச் செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT