Published : 16 Apr 2024 11:32 AM
Last Updated : 16 Apr 2024 11:32 AM

ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; பலர் மாயம்

படகு கவிழ்ந்து விபத்து

புதுடெல்லி: ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆற்றில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ள சூழலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நடந்தது என்ன? ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் ஜீலம் ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உட்பட பல பயணிகளை ஏற்றிச் சென்ற படகு இன்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். கந்த்பால் நவ்காம் பகுதியில் நடந்த சம்பவத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாலை வேளையில் படகு கவிழ்ந்ததாக பட்வாரா கந்தபால் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஸ்ரீநகரில் உள்ள எஸ்எம்ஹெச்எஸ் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் முசாபர் சர்கர் கூறுகையில், “ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், அதில் நான்கு பேர் இறந்தனர், மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் உட்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக முக்கியமான ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டதால், பள்ளத்தாக்குக்கும் பிற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x