Published : 15 Apr 2024 06:11 AM
Last Updated : 15 Apr 2024 06:11 AM
விஜயவாடா: ஆந்திராவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பணியாற்றும் கோபிசந்த் என்ற இளைஞர் சுற்றுலாப் பயணியாக விண்வெளிக்கு செல்ல உள்ளார்.
ப்ளூ ஆரிஜின் எனும் விண்வெளி நிறுவனம் நியூ ஷெப்பர்டு-25 (என்எஸ்-25) என்ற திட்டத்தின் கீழ் 6 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புகிறது. இந்த சுற்றுலாப் பயணிகளில் ஆந்திர இளைஞர் கோபிசந்தும் இடம்பெற்றுள்ளார். விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த கோபிசந்த் தற்போது அமெரிக்காவில் விமானியாக பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் அட்லாண்டாவில் உள்ள ‘ப்ரசர்வ் லைஃப் கார்ப்’ என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். கோபிசந்த், அமெரிக்காவில் எம்ப்ரி ரிடிலில் உள்ள ஏரோநாட்டிகல் பல்கலைக்கழகத்தில் பைலட் படிப்பு படித்தார். இவர் விமானங்கள், ஜெட் விமானங்கள் மட்டுமின்றி கடல் விமானங்கள், கிளைடர்கள் போன்றவற்றையும் இயக்கும் திறன் படைத்தவர் ஆவார்.
இந்திய விமானப் படை விமானியான ராகேஷ் சர்மா, 1984-ல் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இவரை தொடர்ந்து, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜாச்சாரி, சிரிஷா பண்ட்லா என இந்திய வம்சாவளியினர் தொழில்ரீதியாக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
ஆனால் சுற்றுலாப் பயணியாக விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை கோபிசந்த் பெறவுள்ளார். இவர்கள் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT