Published : 21 Apr 2018 07:27 AM
Last Updated : 21 Apr 2018 07:27 AM
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவை யில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும்படி காங்கிரஸ் தலைமையிலான 7 கட்சிகள் அடங்கிய குழு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 7 கட்சிகள் அடங்கிய குழு, மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவை நேற்று சந்தித்தது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான இக்குழு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை வழங்கியது.
டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் இத்தகவலை தெரிவித்த குலாம் நபி ஆசாத், இம்மனுவில் 71 எம்பி-க்கள் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவித்தார். நீதிபதி ஒருவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வர குறைந்தபட்சம் 50 எம்பிக் கள் கையெழுத்திட்டு மனு அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் இதுகுறித்து கூறும்போது, “இத்தகைய நாள் எங்களுக்கு வந்திருக்கக் கூடாது என்றே விரும்புகிறோம். இருந்தாலும், மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் நாங்கள் எப்படி மக்களுக்கு கடமைப்பட்டவர்களோ, அது போல தலைமை நீதிபதியையும் கடமைப்பட்டவராக இருக்க வைப்பது எங்களது கடமை. எனவே, இந்திய அரசியலமைப்பைக் காக்க எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.
திரிணமூல், திமுக விலகல்
தலைமை நீதிபதிக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளை தெரிவித்து பதவி நீக்கம் கோரப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்த திரிண மூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் தற்போது ஆதரவு தெரிவிக்காமல் பின்வாங்கி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தமனுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், அபிஷேக் மனு சிங்வி கையெழுத்திடவில்லை.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 124(4)-ன் படி, நீதிபதி ஒருவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்தி பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்பே நீக்க முடியும். அதற்கான நடைமுறைகள் விவரம்:
1. மக்களவை உறுப்பினர்கள் என்றால் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
2. இந்த நோட்டீஸை ஏற்கவும் நிராகரிக்கவும் சபாநாயகருக்கு உரிமை உண்டு. ஒருவேளை ஏற்றுக் கொண்டால் சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் 3 பேர் கொண்ட குழுவை அமைப்பார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி, சட்ட நிபுணர் ஆகிய மூவர் அடங்கிய இக்குழு பதவி நீக்கம் கோரும் நீதிபதி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தும்.
3. புகாரை 3 பேர் கொண்ட குழு ஏற்றுக் கொண்டால் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள பரிந்துரை அளிக்கும். இந்த தீர்மானம் சபையில் விவாதிக்கப்பட்டு சிறப்பு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற வேண்டும். சிறப்பு பெரும்பான்மை என்பது அந்த சபையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை எண்ணிக்கை மற்றும் விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.
4. ஒரு சபையில் நிறைவேறியபின், அடுத்த சபைக்கு அனுப்பி விவாதிக்கப்பட்டு அதேபோன்று சிறப்பு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற வேண்டும்.
5. இரு சபைகளும் பதவி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது உத்தரவின்பேரில், குறிப்பிட்ட நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT