Published : 14 Apr 2024 02:55 PM
Last Updated : 14 Apr 2024 02:55 PM
புதுடெல்லி: இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக அதில், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்று மீண்டும் தனது பிரதான திட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை 'சங்கல்ப் பத்ரா' என்று அழைக்கப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்று மீண்டும் தனது பிரதான திட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, “குடியுரிமை திருத்தச் சட்டம் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் உறுதியளித்தோம். அதன்படி, செயல்படுத்தியுள்ளோம். 2024 ஆட்சியை பிடித்த பிறகு பொது சிவில் சட்டம் (யுசிசி) நாட்டில் அமல்படுத்தப்படும் என்று கூறினார்.
பொது சிவில் சட்டம்: இதனிடையே பொது சிவில் சட்டம் குறித்து பாஜக தனது தேர்தல் அறிக்கையில், "அரசியலமைப்பு சட்டப்பிரிவு 44, மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் ஒன்றாக பொது சிவில் சட்டத்தை பட்டியலிடுகிறது. அனைத்து பெண்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் பொது சிவி சட்டத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளும் வரை பாலின சமத்துவம் இருக்க முடியாது என்று பாஜக நம்புகிறது. எனவே, பொது சிவில் சட்டம் தொடர்பாக பாஜக தனது நிலைப்பாட்டில் மீண்டும் ஒருமுறை உறுதியாக நின்று வலியுறுத்தும்" என்று தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: "ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்களை ஆராய்வதற்காக உயர் மட்ட குழுவை அமைத்துள்ளோம். உறுதியாக அந்த குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியுள்ளது.
பொது வாக்காளர் பட்டியல்: இதேபோல், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும். அனைத்து நிலை தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலுக்கு நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
ஒரு நாடு, ஒரு மாணவர் ஐடி: கல்வித் தகுதிகள், கிரெடிட் ஸ்கோர்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்காக, பிரைமரி முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு தானியங்கு நிரந்தரக் கல்விக் கணக்குப் பதிவேடு (APAAR) மூலம் 'ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி'யை நூறு சதவீதம் செயல்படுத்துவோம்." என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT