Published : 14 Apr 2024 03:33 PM
Last Updated : 14 Apr 2024 03:33 PM
புதுடெல்லி: மக்களவைக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பொய்ப் பத்திரம் (ஜும்லா பத்திரம்) என்று விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து எந்த தகவலும் அந்த தேர்தல் அறிக்கையில் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏதுவுமே இல்லை அது ஒரு பொய்ப் பத்திரம். ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால் வெற்றுப் பத்திரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
வேலை இல்லாததால் இளைஞர்கள் கவலை அடைந்துள்ளனர். சமையல் எரிவாயுவின் விலை ரூ.300 ல் இருந்து ரூ.1,200 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.55 லிருந்து 90 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பமும் அன்றாட செலவுகளை சந்திக்க திண்டாடி வருகின்றன. பாஜகவில் வெளியிடப்பட்டுள்ள பொய்ப் பத்திரத்தை இனி யாரும் நம்பமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற டேக் லைனுடன் ‘சங்கல்ப் பத்திரம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT