Published : 13 Apr 2024 08:32 PM
Last Updated : 13 Apr 2024 08:32 PM

“மன்மோகன் சிங் தான் உண்மையான ராஜதந்திரி!” - மோடியை விமர்சித்த உமர் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: "மன்மோகன் சிங் தான் ஓர் உண்மையான ராஜதந்திரி. ஒருகட்டத்தில் அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தைப் பற்றி பிரதமர் மோடி சிந்திக்க வேண்டும்" என்று தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பாரமுல்லா தொகுதி தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளருமான உமர் அப்துல்லா சனிக்கிழமை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியது: "எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது என்பது வெளியப்படையாகவும் தெளிவாகவும் தெரிகிறது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணைகளில் 95 சதவீதம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராகவே உள்ளது என்பதில் இருந்து இது தெரியும்.

ஒருகட்டத்தில் பிரதமர் மோடி தனது பாரம்பரியத்தை பார்க்கத் தொடங்குவார். தற்போது ஜவஹர்லால் நேருவை விட நீண்ட காலம் பிரதமராக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நமது நோக்கங்கள் நிறைவேறும் சமயத்தில் நமக்கு இளமை திரும்பிவிடப் போவதில்லை. நாம் எல்லோரும் முதுமையடைவோம். நாம் அனைவரும் மேடையை விட்டு இறங்கும் காலம் வருகிறது. அவரது மனதின் ஏதோ ஓர் இடத்தில், என்ன மாதிரியான பாரம்பரியத்தை அவர் விட்டுச் செல்ல இருக்கிறார் என்று பிரதமர் மோடி யோசிக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை" என்றார்.

தொடர்ந்து, ஒருவேளை மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் மத்திய விசாரணை அமைப்புகளால் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த உமர், "பாஜகவில் இணைபவர்கள் எல்லாரும் வழக்கில் இருந்து விடுபட்டுவிடுவதாக ஒரு தேசிய நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. எனவே இதுதான் யதார்த்தம், இது ஊகிக்கக் கூடிய ஒன்றில்லை. என்றாலும் பரவாயில்லை. மற்றவர்களை அழிக்க பாஜக வசமுள்ள கருவிகளில் அதுவும் ஒன்று.

இண்டியா கூட்டணியின் பிரதமர் யார் என்று கேட்கிறீர்கள். ஏன் அதில் இவ்வளவு கவலை. மக்கள் முதலில் வாக்களிக்கட்டும், கூட்டணி வெற்றி பெறட்டும், பின்னர் நமக்கு ஒரு பிரதமர் கிடைப்பார். இந்தியா ஒளிர்கிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டு, அத்வானி தோல்வியைச் சந்தித்தபோது இந்தக் கவலை எழவில்லை. ஆனாலும் நமக்கு ஒரு பிரதமர் கிடைக்கவில்லையா? அந்தப் பிரதமர் (மன்மோகன் சிங்) வெற்றிகரமாக 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தவில்லையா? அந்த நேரத்தில் மன்மோகன் சிங் பிரதமராவார் என்று யாராவது யோசித்திருப்போமா?

மன்மோகன் சிங் நமது வெற்றிகரமான பிரதமர்களில் ஒருவர். மிகவும் பண்பு மிக்க பிரதமர்களில் ஒருவர். அவர் ஓர் உண்மையான ராஜதந்திரி. இன்று நீங்கள் பார்ப்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள். அவர் சொல்வது சரிதான். அவர் கடந்த 2014-ம் ஆண்டின் மதிப்பீடுகளில் தீர்மானிக்கப்படமாட்டார். வரலாறு அவரை தீர்மானிக்கும். என்னை நம்புங்கள், 2014-ல் இருந்த மக்களைவிட வரலாறு அவருக்குச் சரியாக தீர்ப்பளிக்கும். அதனால் முகத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

எங்களுடைய மூன்று இடங்கள் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஓர் அரசை உருவாக்குவதில் இது சிறியது. அரசைக் கவிழ்ப்பதில் மிகவும் சிறியது. ஒரே ஒரு எம்பி அரசைக் கவிழ்த்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு எம்பியால் ஒன்றை உருவாக்க முடியாது. ஆனால், ஒன்றை கவிழ்க்க முடி்யும். யார் பிரதமராக வேண்டும் என்பதில் நான் தலையிடப்போவதில்லை. மிகவும் தகுதி வாய்ந்த, மிகவும் திறமையான, இந்தியாவைப் பற்றி சரியான பார்வையுள்ள தலைவரோ, தலைவியோ பிரதமராக வருவார்கள். அது அப்படித்தான் இருக்கும்" என்றார் உமர் அப்துல்லா.

என்டிஏவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கமா என்று கேள்விக்கு, “இந்தத் தேர்தலில் போட்டியே இண்டியா கூட்டணி மற்றும் என்டிஏ கூட்டணிக்கு இடையில்தான். பாஜகவைத் தோற்கடிக்கத்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால், அவர்களும் கூட்டணி வைத்துள்ளனர். எனவே, இது இண்டியா கூட்டணிக்கும் என்டிஏவுக்குமான போர்தான்” என்றார் உறுதியாக.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x