Published : 13 Apr 2024 10:28 AM
Last Updated : 13 Apr 2024 10:28 AM

மூன்றாம் கட்ட தேர்தல் - 12 மாநிலங்களில் மனு தாக்கல் தொடங்கியது

மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கும் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின. நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதில் மூன்றாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. அசாம் (4), பிஹார் (5), சத்தீஸ்கர் (7), கோவா (2), குஜராத் (26), கர்நாடகா (14), மத்தியபிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்கம் (4) ஆகிய மாநிலங்களும் ஜம்மு காஷ்மீர் (1), ஹாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ (2) ஆகிய யூனியன் பிரதேசங்களும் மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், இங்குள்ள 94 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின. இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இத்தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 19 கடைசி நாளாகும். மத்திய பிரதேசத்தின் பெத்துல் மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இத்தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததால் இங்கு தேர்தல் மே 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிக்கையையும் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. எனவே பெத்துல் தொகுதியையும் சேர்த்து 95 தொகுதிகளில் மே 7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

அசாமில் குவாஹாட்டி, பார்பேடா, துப்ரி, கோக்ரஜார் (எஸ்டி) ஆகிய 4 தொகுதிகள் மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இத்தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x