Published : 13 Apr 2024 05:46 AM
Last Updated : 13 Apr 2024 05:46 AM
உதம்பூர்: ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப்பேர வைத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மக்கள வைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போட்டி யிடுகிறார். அந்த தொகுதிக்கு வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று உதம்பூரில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீரைஉருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீர் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு உள்ளது. ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் தற்போது கல்வீச்சு சம்ப வங்கள் நடைபெறவில்லை. அமர்நாத் யாத்திரை அமைதியாக நடைபெறுகிறது. காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அதோடு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலும் விரைவில் நடத்தப்படும்.
ஆட்சி, அதிகார ஆசைக்காக சிலர் 370-வது சட்டப்பிரிவை ஆதரித்தனர். மக்களின் ஆசியுடன் அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஒரு சவாலை விடுக்கிறேன். காங்கிரஸ் கட்சியால் மீண்டும் 370-வது சட்டப்பிரிவை கொண்டு வர முடியுமா? இதற்கு அந்த கட்சி பதில் அளிக்க வேண்டும்.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் மிகப்பெரிய மாளிகைகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பகவான் ராமர் கூடாரத்தில் இருந்தார். இந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு உள்ளது. மக்களின் 500 ஆண்டு கால கனவு, நனவாகி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தி நாளிதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களில் 10 கோடி போலி பயனாளிகள் கண்டறியப் பட்டு, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராகுல், அகிலேஷ் யாதவின் முகலாய சிந்தனை: கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புனித ஷிராவண மாதத்தில் மட்டன் பிரியாணி செய்வது குறித்த வீடியோவை ராகுல் காந்தி வெளியிட்டார். தற்போது சைத்ரா நவராத்திரியின் 9-வது நாளில் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மீன் வறுவலை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உதம்பூர் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவின் பெயர்களைக் குறிப்பிடாமல் இருவரையும் கடுமையாக விமர்சித்தார். ‘‘யாரும், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. நானும் தடுக்க மாட்டேன். ஆனால் ஷிராவண மற்றும் சைத்ரா நவராத்திரி விழாவின்போது சிலர் நாட்டு மக்களை சீண்டும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது அவர்களின் முகலாய சிந்தனையை வெளிப்படுத்துகிறது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT