Last Updated : 13 Apr, 2024 05:25 AM

 

Published : 13 Apr 2024 05:25 AM
Last Updated : 13 Apr 2024 05:25 AM

பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கொல்கத்தாவில் கைது

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று மேற்கு வங்கத்தில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். படம்: பிடிஐ

பெங்களூரு / கொல்கத்தா: பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நேற்று அதிகாலைகொல்கத்தாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், இவ்வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கர்நாடகா முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர். தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் 18 இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் மார்ச் 27-ம் தேதி இந்த சதி செயலுக்கு உடந்தையாக இருந்த முஷம்மில் ஷெரீபை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் ஷிமோகாமாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியை சேர்ந்த‌ முசாவீர் ஹூசேன் சாஹீப் (30) உணவகத்தில் குண்டு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே ஊரை சேர்ந்த அப்துல் மதீன் அஹமது தாஹா (30) இதற்கு சதி திட்டம் தீட்டி கொடுத்ததும் தெரியவந்தது. ஐஎஸ் அமைப்பை சேர்ந்த இந்த 2 பேரையும் பற்றி தக‌வல் அளிப்ப‌வர்களுக்கு தலா ரூ.10 லட்சம் சன்மானம்வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்தது.

இந்நிலையில், இந்த 2 பேரும்கொல்கத்தாவில் போலி முகவரிஅட்டை கொடுத்து தங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமைஅதிகாரிகள் மேற்கு வங்க குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து நேற்று அதிகாலையில் ராமேஷ்வரம் உணவகத்தில் குண்டுவைத்தமுசாவீர் ஹூசேன் சாஹீப்பையும், அதற்கு சதி திட்டம் தீட்டிக்கொடுத்த‌ அப்துல் மதீன் அஹமது தாஹாவையும் கைது செய்தனர்.

கைதான 2 பேரையும் அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக- திரிணமூல் காங்கிரஸ் இடையே மோதல்: இந்த கைது தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க மாநில பாஜக இணை பொறுப்பாளர் அமித் மால்வியா, ‘‘மம்தா பானர்ஜி ஆட்சியின்கீழ் மேற்கு வங்கம் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது'' என விமர்சித்தார்.

இதற்கு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ், ‘‘மேற்கு வங்க போலீஸாரின் உதவியால்தான் இந்த கைது நடந்துள்ளது. இதை பாஜகவினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தீவிரவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் பாஜகவினரும் அவர்களின் கூட்டணி கட்சிகளும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருப்பதை மறந்துவிடக்கூடாது'' என பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x