Published : 01 Apr 2018 03:10 PM
Last Updated : 01 Apr 2018 03:10 PM
உத்தரப்பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் அமர்ந்து ஒரு ஆண்டில் ஏறக்குறைய 1,000 என்கவுண்ட்டர்களுக்கு மேல் போலீஸார் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் 370-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளர், சமூகவிரோதிகள் 3,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த என்கவுண்ட்டரின் போது, போலீஸார் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பெரும்பாலான இந்த சம்பவங்கள் மாநிலத் தலைநகர் லக்னோவுக்கு அருகே இருக்கும் மீரட், சாம்லி, முசாபர்நகர், பாக்பாத், சஹாரான்பூர், புலந்த்சாஹர், காஜியாபாத், நொய்டா ஆகிய இடங்களில் நடந்துள்ளன.
ஆனால், இது சமூக விரோதிகளை பிடிக்கும் போது நடத்தப்பட்ட என்கவுண்ட்டர்கள் அல்ல, போலி என்கவுண்ட்டர்கள். இந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும், தலித்களும், முஸ்லிம்களும், பிற்படுத்தப்பட்டவகுப்பு மக்களும்தான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மனித உரிமை ஆணையம்
இந்த என்கவுண்ட்டர்கள் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் பல முறை மாநில அரசுக்கு நோட்டீஸ் அளி்த்துள்ளது.அதிலும் ஆசம்கார்க் நகரில் நடந்த 3 என்கவுண்ட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் போலீஸாருக்கு அனுப்பிய நோட்டீஸ் குறிப்பிடுகையில், ‘உத்தரப்பிரதேசத்தில் உள்ள போலீஸார் இப்போது சுதந்திரமாக உணர்கிறார்கள் என நினைக்கிறோம். அவர்கள் தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் சிறப்பு உரிமையைப்பயன்படுத்தி ஏராளமான மக்களுக்கு அவர்களே நீதி வழங்குகிறார்கள்’ எனத் தெரிவித்திருந்தது.
சிபிஐ விசாரணை
மேலும், உ.பி.யில் உள்ள கீழவை தலைவர் நொய்டா, மதுராவில் நடந்த என்கவுண்ட்டர்கள் குறித்து மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமா எனவும் கேட்டிருந்தார். சமாஜ்வாதி கட்சியின் கீழவைத் தலைவர் ரமேஷ் யாதவ் பேசுகையில், யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து கடந்த ஒரு ஆண்டில், 1000க்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் போலி என்கவுண்ட்டர்களாகும். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனால் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், இந்த என்கவுண்ட்டர்கள் மூலம் மாநிலத்தில் குற்றச்செயல்கள் குறைந்துவிட்டன என்று இதற்கு அரசு நியாயம் கற்பித்து வருகிறது.
போலி என்கவுண்ட்டர்களா?
கடந்த பிப்ரவரி மாதம் நொய்டாவில் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றும் ஜிதேந்திர யாதவ் என்பவரை போலீஸார் என்கவுண்ட்டர் செய்தனர். இது போலி என்கவுண்ட்டர்கள் என்று அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுராவில் நடந்த என்கவுண்ட்டர் சம்பவத்தின் போது, குண்டு தவறுதாலாக சாலையில் சென்ற ஒரு சிறுவனின் தலையில் பட்டு அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புள்ள போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்களும் போலி என்கவுண்ட்டர்களுக்கு உதாரணமாக இருந்து வருகின்றன.
போலீஸ் வாதம்
ஆனால், போலிஸார் தரப்பிலோ தாங்கள் யாரையும் வேண்டுமென்றே சுட்டுக்கொல்லவில்லை. சமூகத்தின் அமைதிக்கும், பொதுமக்களுக்கு தொடர் இடையூறும் செய்யும் நபர்களை கைது செய்ய முற்படும்போது, நடத்தப்படும் தாக்குதலில் இருந்து காக்க தற்காப்பு நடவடிக்கையின்போது இந்த என்கவுண்ட்டர்கள் நடக்கின்றன எனத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து போலீஸ் ஏஎஸ்பி சிங் கூறுகையில், போலீஸார் தார்மீக தர்மத்தின் அடிப்படையில்தான் பணி செய்கிறார்கள். கிரிமினல் குற்றவாளிகளை பிடிக்க முற்படும்போது, ஏற்படும் மோதலின்போதுதான் என்கவுண்ட்டர்கள் நடக்கின்றன என்று தெரிவித்தார்.
குற்றங்கள் குறைகின்றன
முதல்வர் ஆதித்யநாத் இந்த என்கவுண்ட்டர்கள் அனைத்தும் நியாயமானது. இதன் மூலம் குற்றங்கள் குறைந்து வருகின்றன என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டில், குற்றச்செயல்கள் வேகமாக குறைந்துள்ளன. கொலை வழக்குகள் 5.75 சதவீதம், கடத்தல் 13.21 சதவீதம், தலித்களுக்கு எதிரான குற்றம் 16.41 சதவீதம், வழிப்பறி 6 சதவீதம், சாலையைமறித்து தாக்குதல் 100 சதவீதம், கலவர சம்பவங்கள் 30 சதவீதம் குறைந்துள்ளது என்று உ.பி. அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT