Published : 12 Apr 2024 04:47 PM
Last Updated : 12 Apr 2024 04:47 PM
கொல்கத்தா: இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாக கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளர் விமர்சித்துள்ளதற்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, தகுந்த பதிலடியும் கொடுத்துள்ளார்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேக நபர்கள் இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இவர்கள் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், “இந்தப் பிரச்சினையை ஏதோ தொழில் போட்டியின் விளைவு என்பது போல் கர்நாடக காங்கிரஸ் திசை திருப்ப முயற்சித்தது. இப்போது சந்தேக நபர்கள் கொல்கத்தாவின் கைதாகியுள்ளனர். இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது” என கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளர் அஷ்வத் நாராயண் கவுடா விமர்சித்துள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை பதிவு செய்து பதிலடி கொடுத்துள்ளார்.
ராமேஸ்வரம் கஃபே சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் முவாசிர் ஹுசைன் சாஷிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டது குறித்து நாராயண் கவுடா கூறும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு பற்றியோ தேசத்தின் பாதுகாப்பு பற்றியோ எந்த அக்கறையும் இல்லை. ஷிவ்மொகா மாவட்டத்தில் தீர்த்தஹல்லியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது காங்கிரஸ் கட்சி ஏதோ குண்டுவெடிப்பையே பாஜக தான் நிகழ்த்தியது போல் பேசியது.
காங்கிரஸ் கட்சி இச்சம்பவம் தொழில் போட்டியால் நடந்ததுபோல் சித்தரிக்க முற்பட்டது. மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பின்போதும் இதேபோல் தான் செயல்பட்டனர். கர்நாடகா தீவிரவாதச் செயல்களின் கூடாரமாக மாறிவருகிறது. இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்களாக அமைகிறது. தேசிய பாதுகாப்பில் காங்கிரஸுக்கும் இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கும் அக்கறை பற்றி முதல்வர் சித்தரமையாவும், உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரனும் தான் பதிலளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
மம்தா பதிலடி: இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூச் பெஹாரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், “ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களே அல்ல. அவர்கள் இங்கே ஒளிந்து கொண்டிருந்தனர். அவர்கள் இங்கே வந்த 2 மணி நேரத்திலேயே சிக்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில் அமைதி இருந்தால் பாஜகவினாரல் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான, பிஹார் மாநிலங்கள் எல்லாம் பாதுகாப்பானதாக இருக்கிறதா?” என்று பேசினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குணால் கோஷும் பாஜகவை விமர்சித்துள்ளார். இந்த விஷயத்தில் தேசிய புலனாய்வு முகமை உண்மையில் மாநில அரசின் உதவியை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT