Published : 11 Apr 2024 07:04 PM
Last Updated : 11 Apr 2024 07:04 PM
ஜெய்ப்பூர்: “கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேள்வி கேட்கும் காங்கிரஸ், ராஜஸ்தானின் பாலைவனத்தில் யாரும் வசிக்காததால் அதனையும் கொடுத்துவிட துணியுமா?” என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜஸ்தானின் கரோலி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கச்சத்தீவில் யாராவது வசிக்கிறார்களா என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். அப்போது அவர், “கச்சத்தீவில் யாராவது வசிக்கிறார்களா என காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. அப்படி என்றால், யாரும் வசிக்காத இடம் என்றால், அதனை கொடுத்துவிட காங்கிரஸ் துணியும் என அர்த்தமா? ராஜஸ்தானில் பாலைவனம் உள்ளது. இது குறித்து காங்கிரஸ் என்ன சொல்லப் போகிறது? இதற்கு யாராவது உரிமை கோரினால் காங்கிரஸ் என்ன சொல்லும்?
நாட்டுக்கு சேவை செய்வது இதுதானா? இதுதான் காங்கிரஸின் மனநிலை. நாட்டில் மக்கள் வசிக்காத இடத்தைப் பொறுத்தவரை, அது அவர்களுக்கு ஒரு துண்டு நிலம். ராஜஸ்தானின் இடத்தைக் கூட அவர்கள் அப்படியே விட்டுக் கொடுக்கலாம்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி ஏன் ராஜஸ்தானில் பேசுகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ராஜஸ்தானுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையே உள்ள தொடர்பு ஆழமானது. ஜம்மு காஷ்மீருக்காக தங்கள் உயிரைக் கொடுத்த ராஜஸ்தானில் உள்ள தியாகிகளின் கிராமங்களுக்குச் செல்லுங்கள். அப்போது தெரியும், ராஜஸ்தானுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது.
காங்கிரஸின் சிந்தனையும் செயல்முறையும் மிகவும் குறுகிவிட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது இப்படி பேசுபவர்கள், ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பாதுகாப்பை என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT