Published : 11 Apr 2024 06:34 AM
Last Updated : 11 Apr 2024 06:34 AM
புதுடெல்லி: டெல்லி மாநிலத்தில் சமூக நலன், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர் ராஜ் குமார் ஆனந்த். இந்நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஊழலுக்கு எதிரான ஆட்சியை கொடுக்கவே ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்து வந்தார். ஆனால் தற்போது அதே கட்சி ஊழலில் சிக்கித் திளைக்கிறது. எனவே, நான் அமைச்சர் பதவியில் தொடர்வது கடினம் என்பதை உணர்ந்தேன்.
அதனால் அமைச்சர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.அரசியல் மாறினால் நாடு மாறும்என்று கூறியவர் முதல்வவர் அர்விந்த் கேஜ்ரிவால். ஆனால்இன்று அரசியல் மாறவில்லை அரசியல்வாதிகள் தான் மாறி விட்டனர்.
சமுதாயத்துக்கு உழைப்பதற் காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அதேநேரம் பட்டியலின பிரதிநிதித்துவம் பற்றி பேசும் போது பின்வாங்கும் கட்சியில் இனி பணியாற்ற விரும்பவில்லை. மேலும், எந்தக் கட்சியிலும் நான் சேரப் போவதில்லை. டெல்லியை பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சிக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர்.
அதில் ஒருவர் கூட பட்டியலினத்தை சேர்ந்தவர் இல்லை. ஒரு பெண் எம்.பி. கூட இல்லை. பட்டியலின எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு கட்சியில் மரியாதை என்பது சிறிதளவும் இல்லை. இந்த சமயத்தில் பட்டியலின சமுதாய மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இத்தனை காரணங்களை முன் வைத்து ஆம் ஆத்மி கட்சியில் தொடர விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT