Last Updated : 27 Apr, 2018 09:55 PM

 

Published : 27 Apr 2018 09:55 PM
Last Updated : 27 Apr 2018 09:55 PM

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: ஹைதராபாத்தைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. இதில் ஹைதராபாதைத் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம் பிடித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.

2017-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 11 லட்சம் பேர் தேர்வுகளை எழுதினார்கள். மெயின் தேர்வுகள் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதிவரை நடந்தன. 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேர்முகத் தேர்வுகளும் நடந்தன. அனைத்து தேர்வுகளும் முடிந்த நிலையில், முடிவுகள் இன்று யுபிஎஸ்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த துரிஷெட்டி அனுதீப் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர். ஒட்டுமொத்தமாக 990 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 750 ஆண்கள், 240 பெண்கள் ஆவர். இதில் 54 பதவி இடங்கள் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் கன்னட இலக்கியத்தை பாடமாக எடுத்து முதலிடம் பெற்றார். அன்மோல் சிங், 2-வது இடமும், கோபாலகிருஷ்ண ரோனங்கி, சவுமியா பாண்டே, அபிலாஷ் மிஸ்ரா, தினேஷ் குமார் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x