Last Updated : 19 Apr, 2018 09:42 AM

 

Published : 19 Apr 2018 09:42 AM
Last Updated : 19 Apr 2018 09:42 AM

மூடப்படும் நிலையில் தனியார் பள்ளிகள்...

நா

டு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் பிரதிநிதிகள் `கல்வியைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் கடந்த 7-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் கூடினர். இந்தியாவின் கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் இதுபோல் நடந்தது இல்லை. கல்வித் துறையில் ‘லைசன்ஸ் ராஜ்ஜியத்துக்கு’ எதிராகக் கூடிய பள்ளிகள், சுயாட்சி அதிகாரமும் கவுரவமும் அளிக்க வேண்டும் எனக் கோரினர். இதில் பங்கேற்ற 65 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், கத்தோலிக்கப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். தேசிய தனியார் பள்ளிக் கூட்டணி இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

உலகிலேயே அதிக தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு இந்தியா. நகரங்களில் 50% குழந்தைகளும் கிராமங்களில் 33% குழந்தைகளும் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலத்தில் அரசுப் பள்ளிகள் 1.1 கோடி மாணவர்களை இழந்தன. அதே காலத்தில் தனியார் பள்ளிகளில் புதிதாக 1.6 கோடி மாணவர்கள் சேர்ந்தனர். இதே காலத்தில் 8,337 அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் 11 மடங்கு அதிகமாக 96 ஆயிரத்து 416 தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதேநிலை நீடித்தால், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள்தான் இருப்பார்கள், மாணவர்கள் இருக்க மாட்டார்கள். இப்போதே, 6,174 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவன்கூட இல்லை என்கிறது புள்ளி விவரம்.

ஏன் இந்த நிலை? அரசுப் பள்ளிகளில் 4 ஆசிரியர்களில் ஒருவர் பள்ளிக்கு வரமாட்டார்; வந்திருக்கும் 2 ஆசிரியர்களில் ஒருவர் பாடம் நடத்த மாட்டார். அரசுப் பள்ளிக்குப் போனால் மட்டும் கற்றுக்கொள்ள முடியாது என்பதைப் பெற்றோர் உணர ஆரம்பித்து விட்டனர். அதனால்தான் நடுத்தர மக்கள் ஒரு தலைமுறை முன்பிருந்தே அரசு பள்ளிகளைக் கைவிட்டு விட்டனர். மாதக் கட்டணமாக மிகவும் குறைவாக ரூ.417 வசூலிக்கும் தனியார் பள்ளிகள் வந்துவிட்டதால், தற்போது ஏழைகளும் அந்த முடிவுக்கு வந்துவிட்டனர். தரம் குறைவாக இருக்கலாம். ஆனால் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவார்கள். தங்களால் முடிந்த அளவுக்கு உழைத்துப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். மற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களோடு தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் ஒப்பிட்டுப் பார்ப்பதால், அவர்களுக்கும் வேறு வழியில்லை. பெற்றோர் தங்கள் வருமானத்தில் 24%-ஐ தொடக்கக் கல்விக்கும் 38%-ஐ உயர்நிலைக் கல்விக்கும் செலவிடுகிறார்கள்.

ராம்லீலா மைதானத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் கூடியதற்கு முதல் காரணம், கல்வி உரிமைச் சட்டத்தை முறையாகப் பின்பற்றாத ஒரு லட்சம் பள்ளிகளை மூடப்போவதாக அரசு வெளியிட்ட மிரட்டல்தான்.

பள்ளிகள் மாநாடு நடந்த அதே நாளில், உலக வங்கியும் பள்ளிக் கல்வி குறித்தக் கருத்தரங்கை டெல்லியில் நடத்தியது. கற்றலுக்கு கற்பிக்கும் திறனுடன் மாணவர்களின் திறமையை அறிந்து அதை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள் தேவை. பள்ளி மாணவர்களின் திறமையை அறியவும் அதை மேம்படுத்தவும் தேசிய சாதனை சர்வே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளி மாணவர்களை இதுபோல் மதிப்பிடுவதில்லை. அவர்களும் இந்தியாவின் குழந்தைகள்தானே..

1991-ம் ஆண்டே தொழில் துறை மீதான கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் கல்வித்துறைக்கு இந்த விடுதலை கிடைக்கவில்லை. மாநிலத்தைப் பொறுத்து ஒரு பள்ளியை தொடங்க 30 முதல் 45 அனுமதி தேவைப்படுகிறது. இதற்கு லஞ்சம் கேட்கப்படுகிறது. இந்தப் பகுதியில் பள்ளி தொடங்க வேண்டிய தேவை இருக்கிறது என்ற சான்றிதழ் வாங்க மட்டுமே ரூ.5 லட்சம் வரை சில மாநிலங்களில் செலவாகிறது. குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர், எந்த நேரத்திலும் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவார்கள் என்பதால் 70 விதமான அனுமதிகள் தொடர்பான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டியிருக்கிறது எனக் கூறுகிறார். இதில் பல அனுமதிகளை ஆண்டுதோறும் வாங்க வேண்டும். அமெரிக்காவின் மிகச் சிறந்த பள்ளியொன்றில் பணியாற்றிய என்னுடைய தோழி ஒருவர், இந்தியா திரும்பி இங்கு பள்ளிக்கூடம் தொடங்க விரும்பினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் அமெரிக்கா திரும்பிவிட்டார்.

தனியார் பள்ளிகளில் 25% இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதி காரணமாக செலவு அதிகரித்துள்ளதால், பள்ளிக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நோக்கம் நல்லதுதான். ஆனால் பள்ளிகள் பாதிக்கப்படும். ஏழை மாணவர்களுக்கான பள்ளிக் கட்டணத்தை அரசுகள் ஒழுங்காக தருவதில்லை. ஆசிரியர் சம்பளம் இரு மடங்கு, மும்மடங்கு உயர்ந்துவிட்டது. இதை ஈடு செய்ய மீதமுள்ள 75% மாணவர்களின் பெற்றோர் மீதே சுமையை இறக்க வேண்டியிருக்கிறது. மொத்தமுள்ள பள்ளிகளில் 3.6% மட்டுமே மாதத்துக்கு ரூ.2,500-க்கு மேலும், 18% பள்ளிகள் ரூ.1000-க்கும் மேலும் கட்டணம் வசூலிக்கின்றன என்பது தெரியாமல் அரசியல்வாதிகளும் போராட்டத்தை ஆதரிக்கின்றனர்.

கல்விக் கட்டணத்துக்கு கட்டுப்பாடு விதித்தால்,பல பள்ளிகளை மூடும் நிலையே ஏற்படும். ஆந்திராவில் கட்டணத்தைப் பள்ளிக்கூடங்கள் விருப்பம்போல் வசூல் செய்து கொள்ளலாம். ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மற்ற மாநில அரசுகளும் இதைப் பின்பற்றலாம்.

இந்த டெல்லி மாநாட்டில் வைத்துள்ள மூன்றாவது கோரிக்கை, ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை,மாணவர்களிடமே கல்வி உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்பது. பணம் கட்டிப் படிப்பதால், ஏழை மாணவர்களும் கவுரவமாக உணரலாம்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x