Published : 09 Apr 2024 12:06 PM
Last Updated : 09 Apr 2024 12:06 PM

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங் @ மதுரை

நாமக்கல்லில் பாஜக வேட்பாளர் கே.பி. ராமலிங்கத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த ராஜ்நாத் சிங்

மதுரை: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

மதுரையில் பேட்டி அளித்த அவர், “2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான தொலைநோக்கு திட்டத்தை பாஜக கொண்டிருக்கிறது. இதை கருத்தில்கொண்டு பாஜக தனது தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறது. அந்த வகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கைகள் முற்போக்கானவையாக உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்வதாக உள்ளது. எனவே, இரண்டுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. திவாலாகும் வங்கியின் செக் புத்தகத்துக்கும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்திருக்கிறது. ஏவுகனைகள், டேங்குகள் உள்ளிட்ட பல்வேறு தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது. ஆனால், நாம் தற்போது இவற்றை ஏற்றுமதி செய்து வருகிறோம். 2014ல் பாதுகாப்புத் துறையில் இந்திய ஏற்றுமதி மதிப்பு ரூ. 600 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ. 31,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. வரும் காலங்களில் நாம் எந்த அளவுக்கு ஏற்றுமதி செய்வோம் என்பதை இன்னும் சில மாதங்களில் தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் அரசு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது. அதேநேரத்தில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்புத் துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன.

பொருளாதாரத்தில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்திருக்கிறது. உலகின் வலிமையான பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் இருப்பதாக உலக நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரு நாடு என்றால் சின்ன சின்ன பயங்கரவாத சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என அவர்கள் சொன்னார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பயங்கரவாதத்தை ஏறக்குறைய ஒழித்துவிட்டோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும். தற்போது அப்படி இல்லை.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த இந்தியா தற்போது இல்லை என்பதை அண்டை நாடுகளும் தற்போது தெரிந்து வைத்திருக்கின்றன. யாரேனும் நம்மை அச்சுறுத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கக் கூடிய நாடாக நாம் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x