Published : 09 Apr 2024 09:36 AM
Last Updated : 09 Apr 2024 09:36 AM
பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ பசன கவுடா பாட்டீல் யத்னால் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் பாஜகவை சேர்ந்த பிரமுகர் கைதானதாக செய்திகள் வெளியானது. இதற்கு கர்நாடக அமைச்சரும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ், ''பாஜகவினர் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர்'' என விமர்சித்தார்.
இதற்கு கர்நாடக பாஜக எம்எல்ஏ பசன கவுடா பாட்டீல் யத்னால், "தினேஷ் குண்டுராவ் பாதி பாகிஸ்தானி. அவரது வீட்டிலேயே பாகிஸ்தானி இருப்பதால், அவர் இப்படித் தான் பயங்கரவாதம் பற்றி பேசுவார்” என விமர்சித்தார்.
இந்நிலையில் தினேஷ் குண்டுராவின் மனைவி தபு ராவ் பாஜக எம்எல்ஏ பசன கவுடா பாட்டீல் யத்னாலுக்கு எதிராக சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவள் என்பதால் பசனகவுடா பாட்டீல் யத்னால், என் கணவர் தினேஷ் குண்டுராவை அரை பகிஸ்தானி உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். அவரது இந்த கருத்து எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது” எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் எம்எல்ஏ பசன கவுடா பாட்டீல் யத்னால் மீது இந்திய தண்டனை சட்டம் 153 (பி) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT