Published : 09 Apr 2024 06:25 AM
Last Updated : 09 Apr 2024 06:25 AM

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாநில சுதந்திரத்தை பாதுகாப்போம்: கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் திட்டவட்டம்

சென்னை: காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கூட்டாட்சி கட்டமைப்பை மேம்படுத்தி மாநிலத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம் என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உறுதியளித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழககாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் பெற்றுக்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: அஜோய்குமார்: பல்வேறு மதம், மொழி, கலாச்சாரம், உணவு பழக்கம் என பன்முகத்தன்மை கொண்டது இந்தியா. ஆனால் இவற்றை பாஜக அழிக்க நினைக்கிறது. உலகில் பிரதமர் மோடி அளவுக்கு யாராலும் பொய் சொல்ல முடியாது. தனது பணக்கார நண்பர்களுக்காக அவர் இதுவரை ரூ.18 லட்சம் கோடி வரி சலுகை அளித்துள்ளார். நாட்டில், படித்த இளைஞர்கள் 40 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், நாட்டில் கூட்டாட்சி கட்டமைப்பை மேம்படுத்தி மாநிலத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம். எந்த ஒரு அரசியல் கட்சிகளின் தலையீடும் இன்றி மாநில அரசு தங்களது சமூகநல திட்டங்களை செயல்படுத்தலாம். இடஒதுக்கீட்டை அதிகரித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். நீதிதுறையில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இதுவரை எந்த ஒரு நாடும்,எந்த ஒரு அரசியல் கட்சியும் முயற்சிக்காத வகையில், அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் தனியார், பொதுத்துறை நிறுவனங்களில் ஓராண்டு பயிற்சி பெற தொழில் பயிற்சி உரிமை சட்டம் கொண்டு வரப்படும்.

டீ செலவுக்குகூட காசு இல்லை: செல்வப்பெருந்தகை: நேரு காலம் முதல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தவரை, கொடுத்த அனைத்து வாக்குறுதியையும் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. பாஜகவால் இப்படி சொல்ல முடியுமா. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளருக்கு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடியோ, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ இதுவரை வாய் திறக்கவில்லை. இதுவே எதிர்க்கட்சியினர் செய்திருந்தால் சும்மா இருப்பார்களா?

பாஜக வளர்ச்சி அடைந்துள்ளதாக அண்ணாமலை கூறிவருகிறார்‌. ஆனால், நோட்டாவுக்கு கீழ்தான் பா‌ஜக இருக்கும். இதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.பாஜகவிடம் கோடி கோடியாக பணம் உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரிடம் டீ செலவுக்குகூட காசு இல்லாமல், வெறும் தண்ணீரை குடித்துக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, பொதுச் செயலாளர்கள் இல பாஸ்கரன், எஸ்.ஏ.வாசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x