Published : 21 Apr 2018 08:27 AM
Last Updated : 21 Apr 2018 08:27 AM

நடிகை ஸ்ரீ ரெட்டியை சர்ச்சைக்குரிய வகையில் பேசவைத்த ராம்கோபால் வர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிவி சேனல்களை கண்டித்து நடிகர் பவன் கல்யாண் ஆர்ப்பாட்டம்

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன் கல்யாணின் தாயாரை நடிகை ஸ்ரீ ரெட்டி விமர்சித்த விவகாரம் பூதாகரமாகி வருகிறது. அவரை அப்படி பேச வைத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஃபிலிம் சேம்பர் அலுவலகத்தை பவன் கல்யாண் முற்றுகையிட்டார்.

நடிகை ஸ்ரீரெட்டியின் விவகாரத்தால் தெலுங்கு திரையுலகில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் நடிகை ஜீவிதா மற்றும் நடிகர் பவன் கல்யாண் குறித்து கடுமையாக விமர்சித்தார். இதில், நடிகர் பவன் கல்யாணின் தாயார் குறித்தும் அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பூதாகரமானது. இதனை தெலுங்கு திரையுலகினர் பலர் கண்டித்தனர். ‘நான் இப்படி பேசியதற்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா தான் காரணம்’ என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியதை அடுத்து, இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது. ராம்கோபால் வர்மாவும் இதை ஒப்புக் கொண்டார். ராம்கோபால் வர்மாவுக்கு சிரஞ்சீவியின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் பவன் கல்யாண், ‘‘முதலில் நான் என் தாய்க்கு மகன். அதன் பிறகுதான் நான் நடிகன், கட்சி தலைவன். எனவே, என் தாய்க்கு நான் ஆதரவாக இல்லாவிடில், இந்த வாழ்க்கையை வாழ்வதை விட இறப்பதே மேல்’’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடிகர் பவன் கல்யாணின் ரசிகர்கள், ராம்கோபால் வர்மாவை தீவிரமாக கண்டித்தனர். இந்நிலையில், நேற்று திடீரென நடிகர் பவன் கல்யாண் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சேம்பருக்கு வந்தார். ‘‘ராம்கோபால் வர்மா மீது ஃபிலிம் சேம்பர் நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன்’’ என கூறி அமர்ந்து கொண்டார். இவரது சகோதரும் நடிகருமான நாகபாபு மற்றும் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண், அல்லு அரவிந்த், வருண் தேஜ், சாய் தரம் தேஜ், அல்லு சிரீஷ் மற்றும் பல நடிகர்கள் ஃபிலிம் சேம்பருக்கு வந்து பவன் கல்யாணுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பவன் கல்யாண் ஆர்ப்பாட்டத்தை அறிந்த அவரது ரசிகர்கள் ஃபிலிம் சேம்பருக்கு வரத் தொடங்கினர். இதனால் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘எனது தாயார் குறித்து ஸ்ரீரெட்டி விமர்சித்ததை பல தெலுங்கு சேனல்கள் ஒளிபரப்பி ரேட்டிங்கை உயர்த்தி கொண்டன. ஆனால், இதற்கான அவமானத்தை நாங்கள்தான் அனுபவித்தோம். விரைவில் அதுபோன்ற சேனல்கள் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நான் யாரென உங்களுக்கு ஒரு பெரிய ‘ஷோ’வை விரைவில் காட்டப்போகிறேன்’’ என பவன் கல்யாண் ஆவேசமாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ரசிகர்கள், ஹைதராபாத்தில் சில ஊடகங்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றம் உண்டானது.

அதன் பின்னர் போலீஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்க, “நாளைக்குள் இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது ஃபிலிம் சேம்பர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நடப்பதே வேறு” என பவன் கல்யாண் சவால் விட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஃபிலிம் சேம்பரின் தலைவர் சிவாஜி ராஜா நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x