Published : 25 Apr 2018 03:57 PM
Last Updated : 25 Apr 2018 03:57 PM
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கான சமையல் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கழிவறையில் சேமித்து வைக்கப்படுவதும், கழிவறையின் வாசலில் வைத்து சமைக்கப்படுவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தாமோவில் அரசுப் பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மதிய உணவு செய்ய தேவையான சமையல் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வைக்க தனியறை இல்லாததால், பள்ளியின் கழிவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், மதிய உணவானது கழிவறையின் வாசலில் வைத்தே தயாரிக்கப்படுகிறது.
இதுகுறித்த தகவல்கள் செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து, அப்பள்ளியில் உணவுப்பொருட்களை சேமித்து வைக்க தனி அறையொன்றும், சமையலறையும் இல்லாததும் தெரியவந்தது. இதனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இதற்கு காரணமாக அப்பள்ளியில் மதிய உணவுக்கான பொறுப்பை நிர்வகித்து வரும் சுய உதவிக் குழுவை தலைமை ஆசிரியர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கோபால் பார்கவ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இதுபோன்ற சம்பவங்கள் வேறு எங்கும் இனி நடைபெறக் கூடாது. ஊழல் காரணமாக நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்கப்படும். பள்ளிகளில் மதிய உணவைத் தயாரிக்கும் பொறுப்புகளில் உள்ள உதவிக் குழுக்கள் அனைத்தையும் கண்காணிப்பது கடினம்'' என அமைச்சர் கோபால் பார்கவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT