Published : 07 Apr 2024 12:09 PM
Last Updated : 07 Apr 2024 12:09 PM
புதுடெல்லி: புதிய மாற்றங்களுடன் 2024-25 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் தயாராகி வருகின்றன. மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) நூல்களில் பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக மாற்றியமைக்கட்ட தகவல்கள், பிளஸ் 2 சிபிஎஸ்இ பாடங்களில் நடப்பு ஆண்டு முதல் சேர்க்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான முறையில் இக்கோயில் இன்னும் கட்டப்பட்டு வருகிறது. இதில் மசூதி இடிப்பு குறித்த வரலாற்று குறிப்புகள் பிளஸ் 2 வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடப்பிரிவின் நூல்களில் இடம்பெற்றிருந்தன. பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சினைகள் நான்கு பக்கப் பாடங்களாக போதிக்கப்பட்டு வந்தன. தற்போது மசூதி இடிப்பின் குறிப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. என்சிஇஆர்டியின் இணையதளத்தில் வெளியிடுள்ள அறிவிப்பில் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்கு பின்னர் மாணவர்கள் மீது கல்விச்சுமையை குறைக்கும் பொருட்டு இவை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிர்வாகத்திலான என்சிஇஆர்டி, அவ்வப்போது மாணவர்களின் பாடநூல்களில் தேவைக்கேற்ப மாற்றங்களை ஆராய்ந்து அளித்து வருகிறது. இவற்றை ஏற்று சிபிஎஸ்இ தனது பாடநூல்களில் மாற்றங்களை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இந்த பாடங்களை ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 4 கோடி மாணவர்கள் பயில்கின்றனர்.
இதேபோல், வரலாற்று பாடத்திலும் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஹரப்பா நாகரிகம் மீதான இந்த பாடத்தில் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல எனவும், அவர்களும் இந்தியாவின் பழங்குடிகளே எனும் வகையிலானக் கருத்து சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு, ஹரியானாவின் ராக்கிகர் எனும் இடத்தில் நடைபெற்ற அகழ்வராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஆதாரமாக்கப்பட்டு உள்ளன. ராக்கிகரின் ஆராய்ச்சிகள் முதன்முதலில் வெளியான போது அதை இடதுசாரி உள்ளிட்ட பெரும்பாலான வரலாற்றாளர்கள் ஏற்கவில்லை.
ஏனெனில், தமிழர்களான திராவிடர்களே ஹரப்பா நாகரிகத்தின் பூர்வகுடிகளாகக் இதுவரையும் கருதப்படுகின்றனர். இந்நிலையில், புதிய மாற்றங்களுடன் நடப்பு கல்வியாண்டு 2024-25 க்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் தயாராகி வருகின்றன. ஏற்கெனவே, என்சிஇஆர்டி கடந்த காலங்களில் இந்துத்துவா அரசியல், 2002 -ல் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மதக்கலவரங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான பல குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி நாட்டில் 14.2 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT