Published : 07 Apr 2024 11:00 AM
Last Updated : 07 Apr 2024 11:00 AM
பிரதமர் நரேந்திர மோடி நாட்டைவிட, தன்னை உயர்ந்தவராக கருதுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: சுதந்திர போராட்ட காலத்தில் நமது முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் இந்தியா சுதந்திரமடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியால் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.
இந்த நாடு ஒரு சிலரின் சொத்து கிடையாது. அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விட, தன்னை உயர்ந்தவராக கருதுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை அவர் படிப்படியாக அழித்து வருகிறார். இந்திய அரசமைப்பு சாசனத்தை மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜகவில் இணையச் செய் கின்றனர்.
இது அநாகரிக அரசியல் ஆகும். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்.
ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் சர்வாதிகார பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT