Published : 04 Apr 2018 09:10 AM
Last Updated : 04 Apr 2018 09:10 AM
ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் பத்திரமாக உள்ளதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியுள்ளார்.
தொழிலதிபர்கள் சிலர் பல்வேறு வங்கிகளில் கோடிக் கணக்கில் முறைகேடாக கடன் பெற்றது அம்பலமாகி வருகிறது. இந்நிலையில், திருப்பதி உண்டியலில் பக்தர்கள் கோடிக் கணக்கில் காணிக்கையாக செலுத்தி, அதை அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணம் எந்த அளவுக்கு பத்திரமாக உள்ளது? என திருப்பதியைச் சேர்ந்த ராயல்சீமா போராட்ட சமிதியின் தலைவர் நவீன் குமார் ரெட்டி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுதிய பணம் வங்கிகளில் பத்திரமாக உள்ளது. அதிக வட்டி கொடுக்க முன் வரும் வங்கிகளில் மட்டுமே காணிக்கை பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் பக்தர்கள் யாரும் இதுகுறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. விஜயா வங்கி 7.27 சதவீதமும் ஆந்திரா வங்கி 7.32 சதவீதமும் வட்டி கொடுக்க முன்வந்துள்ளது. ஆதலால் ஆந்திரா வங்கியில் மட்டுமே ரூ.3,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
அரசாணை 124-ன்படியும் நிபுணர்களின் ஆலோசனைப்படியும், சில தனியார் வங்கிகளிலும் காணிக்கை பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இண்டஸ் இந்த் வங்கியில் ரூ.1,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 7.66 சதவீதம் வட்டி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதேபோல, சிண்டிகேட் வங்கி 7.05%, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7.01%, சப்தகிரி கிராமீய வங்கி 7.15%, பேங்க் ஆஃப் பரோடா 7.00%, பேங்க் ஆஃப் இந்தியா 5.85%, யூனியன் வங்கி 6.75%, இந்தியன் வங்கி 6.50 சதவீதம் என வட்டி வழங்குகிறது. எனவே, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள காணிக்கை பணம் பத்திரமாக உள்ளது. இதுகுறித்து சிலர் பரப்பும் பொய்யான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT