Published : 06 Apr 2024 06:44 PM
Last Updated : 06 Apr 2024 06:44 PM
சஹரன்பூர் (உ.பி): சுதந்திரப் போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சுதந்திரப் போராட்டத்தின்போது இருந்த காங்கிரஸ், பத்தாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸில் பல முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி காங்கிரஸில் இருந்தார். இன்று எஞ்சியிருக்கும் காங்கிரஸிடம் தேச நலனுக்கான கொள்கைகளோ, தேசத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையோ இல்லை.
இன்றைய காங்கிரஸ், இன்றைய இந்தியாவின் நம்பிக்கைகளிலும், விருப்பங்களிலும் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை நேற்று அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை நிரூபித்துள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது.
காங்கிரஸ் தற்போது கண்ணுக்குத் தெரியக் கூடியதாக இல்லை. தொலைதூரத்தில் கூட காங்கிரஸ் தெரியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் வேட்பாளர்களை மாற்ற வேண்டிய நிலையில் அக்கட்சி உள்ளது. காங்கிரஸின் நிலைமை இன்னும் விசித்திரமானது. அக்கட்சிக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை. காங்கிரஸ் தனது கோட்டையாகக் கருதும் தொகுதிகளில் கூட (அமேதி மற்றம் ரேபரேலியை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்) வேட்பாளர்களை நிறுத்தும் துணிச்சல் அக்கட்சிக்கு இதுவரை இல்லை.
நிலையற்றதும், நிச்சயமற்றதுமான தன்மைக்கான மற்றொரு பெயராக இண்டியா கூட்டணி மாறியுள்ளது. அதனால்தான் இன்று அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தைக் கூட நாடு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்; NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்; குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்; எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50% என்ற உச்ச வரம்பை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம்; பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் முதலான வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றன. வாசிக்க > பாஜக சுவடுகளுக்கு ‘குறி’, மாநிலங்களை ‘கவரும்’ உத்தி... - காங்கிரஸ் வாக்குறுதிகள் சொல்வது என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT