Published : 06 Apr 2024 05:21 PM
Last Updated : 06 Apr 2024 05:21 PM

“இண்டியா கூட்டணி தலைவர்களின் ஒரே நோக்கமே கமிஷன்தான்” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சஹரன்பூர் (உ.பி): கமிஷன் வாங்குவதற்கான வழிகளைத் தேடுவதே இண்டியா கூட்டணி தலைவர்களின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இண்டியா கூட்டணி தலைவர்களின் ஒரே நோக்கம், கமிஷன் வாங்குவதற்கான வழிகளைத் தேடுவதுதான். அதேநேரத்தில், நாட்டை முன்னேற்றுவது என்ற ஒரே நோக்கத்தோடு இருக்கக் கூடிய கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ). காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கமிஷன் வாங்குவதை ஊக்குவித்திருக்கிறது; அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது எங்கள் லட்சியம். தேர்தல் பிரச்சார வாக்குறுதி அல்ல. பெண் சக்திக்கானது இந்த மண். சக்தி மீது நம்பிக்கை கொண்ட, சக்தியை கடவுளாக வழிபடக் கூடிய நாடு இது. இருந்தபோதும், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த சில தலைவர்கள், சக்திக்கு எதிராக போராட வேண்டும் என வெளிப்படையாக கூறி இருக்கின்றனர். நமது பழங்கால புத்தகங்கள் மற்றும் புராணங்களை எடுத்துப் பார்த்தால் புரியும், சக்தியை வீழ்த்த முயன்றவர்களின் கதி என்ன ஆனது என்று.

10 வருடங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்துக்காக சஹரன்பூர் வந்திருந்தேன். அப்போது, நாடு கடும் நெருக்கடியில் இருந்தது. பெரும் விரக்தியும், நெருக்கடியும் நிறைந்த ஒரு காலகட்டத்தை நாடு கடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் உறுதியளித்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கும் வரை ஓய்வெடுக்க மாட்டேன்; நமது தாய்நாட்டின் பெருமை கேள்விக்குள்ளாக விடமாட்டேன்; காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருந்த நமது நாட்டின் சிறப்பு நின்றுபோக ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று நான் சபதம் செய்தேன்.

உங்களின் ஆசீர்வாதத்துடன் என்றாவது ஒரு நாள், தீமைகள் மற்றும் இன்னல்களில் இருந்து நாட்டை விடுவிப்பேன் என்று நான் அப்போது தீர்மானித்தேன். விரக்தியை நம்பிக்கையாக மாற்றுவேன் என்று உறுதியளித்தேன். நீங்கள் என் மீது உங்கள் அன்பையும் பாசத்தையும் பொழிந்தீர்கள். உங்கள் நம்பிக்கையையும் ஆதரவையும் திருப்பிக் கொடுப்பதற்காக எந்த ஒரு வாய்ப்பையும் நான் விட்டுவிடவில்லை” என்று பிரதமர் மோடி பேசினார்.

உத்தரப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு: 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தலில் சஹரன்பூர் உள்பட 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x