Published : 06 Apr 2024 04:40 PM
Last Updated : 06 Apr 2024 04:40 PM

‘மத்திய அமைச்சரின் ஓர் ஆண்டு வருமானம் ரூ.680 மட்டுமே’ - தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

திருவனந்தபுரம்: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 2021-22-ம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.680 என வேட்புமனுவில் தெரிவித்துள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிடுகிறார். சில தினங்கள் முன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த ராஜீவ் சந்திரசேகர், அதில் தனது சொத்து விவரங்கள் அடங்கிய தேர்தல் பிராமணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில், தனக்கு அசையும் சொத்துகளாக ரூ.9.26 கோடியும், அசையா சொத்துகளாக ரூ.14.4 கோடியும், தனது மனைவியின் பெயரில் ரூ.12.47 கோடி சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதேநேரம், 2021-22ம் நிதியாண்டில் தனது வரிக்குரிய வருமானம் ரூ.680 என தேர்தல் பிராமணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

பிராமணப் பத்திரத்தில் 2018-19-ல் ரூ.10.8 கோடியும், 2019-20-ல் ரூ.4.5 கோடியும், 2020-21-ல் ரூ.17.5 லட்சமும், 2021-22-ல் ரூ.680-ம், 2022-23-ல் ரூ.5.59 லட்சமும் வருமானம் கிடைத்தாக தெரிவித்துள்ளார். ஆனால், 2021-22 ஆண்டு சமயத்தில் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவரது வருமானம் ரூ.680 குறிப்பிட்டிருப்பது பொய் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், ராஜீவ் சந்திர சேகர் வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது காங்கிரஸ்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "அற்புதம், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 2021-22 நிதியாண்டில் ரூ.680 மட்டுமே வருமானமாக காட்டியுள்ளார். சொல்லப்போனால் அந்தக் காலகட்டத்தில் அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் வருமான வரித்துறை நோட்டீஸ்கள் பாஜக அமைச்சர்களுக்கு கிடையாது. அவை எதிர்க்கட்சிகளுக்கு மட்டும். இப்படித்தான் பாஜகவுக்காகவும் மற்றும் மோடிக்காவும் ஏஜென்சிகள் வேலை செய்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x