Published : 06 Apr 2024 01:01 PM
Last Updated : 06 Apr 2024 01:01 PM
புதுடெல்லி: பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் விருப்பமான கட்சியாக பாஜக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பாஜக தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக பாஜகவை கட்டியெழுப்பிய அனைத்து சிறந்த பெண்கள் மற்றும் ஆண்களின் கடின உழைப்பு, போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நான் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். ‘தேசம் முதலில்’ என்ற முழக்கத்துடன் எப்போதும் பணியாற்றும் இந்தியாவின் விருப்பமான கட்சி பாஜக என்பதை நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும்.
வளர்ச்சியை தருவது, நல்லாட்சியைத் தருவது, தேசிய விழுமியங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவது ஆகியவற்றில் பாஜக முத்திரை பதித்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். தொண்டர்களால் இயக்கப்படும் பாஜக 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளையும் கனவுகளையும் உள்ளடக்கியது. தங்களது அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய, 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு தலைமை தாங்குவதற்கு ஏற்ற கட்சியாக பாஜகவை இந்திய இளைஞர்கள் பார்க்கின்றனர்.
மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, எங்கள் கட்சி நல்லாட்சியை மறுவரையறை செய்துள்ளது. எங்களது திட்டங்களும், கொள்கைகளும் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பலத்தை அளித்துள்ளது. பல தசாப்தங்களாக விளிம்பு நிலையில் விடப்பட்டவர்கள் தங்களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக, நம்பிக்கை அளிக்கும் கட்சியாக நமது கட்சியைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையையும் எளிதாக்கும் நோக்கில், ஒட்டுமொத்த வளர்ச்சியை வழங்குவதற்காக நாம் உழைத்துள்ளோம்.
தேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களின் அடையாளமாக இருந்த ஊழல், குரோதம், ஜாதிவாதம், வகுப்புவாதம், வாக்கு வங்கி அரசியல் ஆகியவற்றில் இருந்து நாட்டை நமது கட்சி விடுவித்துள்ளது. இன்றைய இந்தியாவில், வளர்ச்சியின் பலன்கள் எந்தவித பாகுபாடுமின்றி ஏழைகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தேசிய அளவிலான முன்னேற்றம் மற்றும் மாநில அளவிலான விருப்பங்கள் ஆகியவற்றுக்கு இடையே சரியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமாக பாஜக இருப்பதிலும் நாம் பெருமிதம் கொள்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு துடிப்பான கூட்டணி. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை உள்ளடக்கியது. இந்த கூட்டணியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். வரும் காலங்களில் இது இன்னும் வலுவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
புதிய மக்களவையை தேர்ந்தெடுக்க இந்தியா தயாராகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சரி செய்யப்பட்ட நிலத்தில் கட்டிடத்தைக் கட்டி எழுப்புவதற்கு மக்கள் இன்னொரு பதவிக்காலத்தை நமக்கு ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். மக்கள் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருக்கும், நமது திட்டங்களை மக்களிடம் விரிவாக எடுத்துக்கூறிவரும் பாஜக மற்றும் என்டிஏ தொண்டர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT