Published : 06 Apr 2024 11:37 AM
Last Updated : 06 Apr 2024 11:37 AM
டெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்கு சதவீதத்தை அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் கூறுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து, குறிப்பாக, குறைந்த வாக்குப்பதிவு சதவீத வரலாற்றைக் கொண்ட நகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவர்கள் (டிஇஓ) இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
தேர்தலில் வாக்கு செலுத்துவது குறித்து விழிப்புணர்வு இல்லாத நகர்ப்புற மற்றும் கிராமப்புற நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதன் அவசியத்தையும், அதன் வலிமை என்ன என்பதையும் புரியவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
266 நகர்ப்புற மற்றும் கிராமப்புற நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்களிப்பு அமலாக்கத்துக்கான சிறப்பு திட்டம் இந்த ஆலோசனை கூட்டத்தில் தயார் செய்யப்பட்டது என்றார். தேர்தல் நடைமுறையில் சுய ஊக்கத்துடன் பங்களிப்பு செய்வது அவசியம்.
அதேபோன்று, வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை வழங்குதல், வாக்கு சதவீத இலக்கை எட்டுதல், குடியுரிமை நல சங்கங்கள், செல்வாக்கு மிக்க நபர்களின் தேர்தல் ஈடுபாடு ஆகியவற்றை உறுதி செய்வது அவசியம் என்பதை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணைய கூட்டத்தில் வாக்காளர் அக்கறையின்மை குறித்த சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. அதில், நகர்ப்புற மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாமல் இருப்பது பெரும் கவலையை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT