Published : 06 Apr 2024 04:16 AM
Last Updated : 06 Apr 2024 04:16 AM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மாநிலங்களின் விருப்பப்படி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட செயல் திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
மக்களவை தேர்தலையொட்டி, இண்டியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸின் 48 பக்க தேர்தல் அறிக்கை டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் வெளியிட்டனர்.
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான நீதி, சமூக நீதி ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை ‘நியாய பத்திரம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:
> தேசிய சமூக உதவிதிட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.
> நாடு முழுவதும் ‘மகாலட்சுமி திட்டம்’ அமல்படுத்தப்படும். இதன்படி ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
புதிய ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் - ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கிடையாது: பண மதிப்பு நீக்கம், ரஃபேல் ஒப்பந்தம், பெகாசஸ் சாப்ட்வேர், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற குற்றவாளிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். பாஜகவில் இணைந்த ஊழல்வாதிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி உள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்படும்.
தற்போதைய ஜிஎஸ்டி சட்டங்கள் மாற்றப்படும். சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட கொள்கைகளின்படி புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்படும். இதன்மூலம் ஏழைகள் மீதான ஜிஎஸ்டி வரிச்சுமை நீக்கப்படும். வரி வருவாயில் மாநிலங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படும்.
தேர்தல் ஆணையம், மத்திய தகவல் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம், சிஏஜி, எஸ்சி, எஸ்சி, சிறுபான்மையினர், ஓபிசி உள்ளிட்ட ஆணையங்களின் சுதந்திரம் வலுப்படுத்தப்படும்.
கட்சி மாறும் எம்எல்ஏ, எம்.பி.க்களை உடனடியாக தகுதியிழக்க செய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
உச்ச நீதிமன்றத்துடன் ஆலோசித்து தேசிய நீதித் துறை ஆணையம் அமைக்கப்படும். இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT