Published : 05 Apr 2024 06:50 PM
Last Updated : 05 Apr 2024 06:50 PM

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என்ஐஏ தகவல்

ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு சம்பவத்தின் சந்தேக நபர்.

புதுடெல்லி: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது பெயர் முசாவிர் ஹூசைன் சாஹிப். இந்த சதிச் செயலில் உடந்தையாக இருந்தவர் அப்துல் மதீன் தாஹா. இருவருமே கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு உதவிய சிக்மங்களூருவின் கால்சா பகுதியைச் சேர்ந்த முசாம்மில் ஷரீப் என்பவர் கடந்த மார்ச் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 18 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. மேலும், தலைமறைவான ஒவ்வொரு குற்றவாளி குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் என 29.03.2024 அன்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரிக்க தலைமறைவான மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களின் கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்கள் உட்பட அறிமுகமானவர்கள் அனைவரையும் வரவழைத்து என்ஐஏ விசாரித்து வருகிறது.

வழக்கானது பயங்கரவாத சம்பவம் என்பதால், சாட்சிகளின் அடையாளம் குறித்த எந்தத் தகவலும் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதோடு, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம். எனவே, தலைமறைவான குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய அனைவரின் ஒத்துழைப்பையும் என்ஐஏ கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x