Published : 05 Apr 2024 03:41 PM
Last Updated : 05 Apr 2024 03:41 PM

“பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு” - ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 'நியாய பத்திரம்' என்ற பெயரில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்" என தெரிவித்தார்.

பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "கடந்த 2004-ல் செய்தது போல், 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கருத்து தற்போது பரப்பப்படுகிறது. அந்த பிரச்சாரத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கொள்கை அடிப்படையிலான தேர்தல் இது. பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அச்சம் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் வெளியேறி இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள். கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் யாரும் அஞ்ச மாட்டார்கள்.

எங்கள் தலைவர்களான சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் அச்சம் இல்லை. ஆனால், பிரதமரிடம் அச்சம் இருக்கிறது. எங்கள் கட்சியில் இருந்து சிலரை எடுத்துக்கொண்ட பிறகு தற்போது 400+ பற்றி பிரதமர் பேசுகிறார். அவரால் உலகம் முழுவதற்கும் செல்ல முடியும்; ஆனால் மணிப்பூருக்குச் செல்ல முடியாது. ராகுல் காந்தி மணிப்பூருக்குச் சென்றார். ஆனால், பிரதமரால் ஏன் முடியவில்லை? ஏனெனில் அவர் அச்சத்துடன் இருக்கிறார். யார் அச்சத்துடன் இருக்கிறார்களோ அவர்களால் நாட்டை நடத்த முடியாது" என தெரிவித்தார்.

காங்கிரஸ் வாக்குறுதிகள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்’ என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையாக வாசிக்க > மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு; பெண்களுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

இந்நிகழ்வில் பேசிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரான ப.சிதம்பரம், “இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சம் ‘நீதி’. கடந்த 10 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வகையான நீதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது, பலவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது, சில விஷயங்களில் மறுக்கப்பட்டுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நோக்கில் பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இந்த தேர்தல் அறிக்கை வேலை, வளம், நலத்திட்டம் எனும் 3 சக்திவாய்ந்த வார்த்தைகளைக் கொண்டுள்ளது” என்றார். அதன் முழு விவரம்: “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழ்மை ஒழிக்கப்படும்” - ப.சிதம்பரம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x