Last Updated : 05 Apr, 2024 09:02 AM

 

Published : 05 Apr 2024 09:02 AM
Last Updated : 05 Apr 2024 09:02 AM

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு

மீட்கப்பட்ட குழந்தை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டிகா அருகில் லச்யான் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் சதீஷ் முஜகொண்டா (29) - பூஜா (25) தம்பதிக்கு சாத்விக் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

சதீஷின் தந்தை சங்கரப்பா விவசாய தேவைக்காக வீட்டுக்கு அருகிலுள்ள தனது நிலத்தில் 30 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு தோண்டினார். ஆனால் நீர் கிடைக்காததால், அதை பாதியிலேயே கைவிட்டார். இந்நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சாத்விக், கடந்த புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விஜயபுரா மாவட்ட தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் உடனடியாக குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் விஜயபுரா மாவட்ட ஆட்சியர் பூபாலன் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து குல்பர்கா, பெலகாவி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

குழந்தை சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் செலுத்தி, கேமராவை நுழைத்து கண்காணித்தனர். சுமார் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்ததையும், அதன் அசைவுகளையும் மீட்பு படையினர் கேமரா மூலம் கண்டறிந்தனர்.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுமார் 20 அடிக்கு பள்ளம் தோண்டினர். 20 மணி நேர தொடர் போராட்டத்துக்கு பிறகு, குழந்தை சாத்விக்கை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தையைக் கண்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை - தமிழக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஆழ்துளை கிணறு தோண்டுவது, மூடுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்படி, ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும், முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே கிணறு தோண்ட வேண்டும். கிணறு தோண்டும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளைக் கிணற்றை முறையாக மூட வேண்டும்.

ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட பகுதியை உறுதியான இரும்பு தகடு கொண்டு மூடவேண்டும். ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்த கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனை தோண்டிய நபருமே பொறுப்பேற்க வேண்டும். பதிவு செய்யாமல், அனுமதி இன்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால், அபராதத்துடன் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு தமிழக போலீஸ் அதிகாரிகள் கூறினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x