Published : 05 Apr 2024 08:15 AM
Last Updated : 05 Apr 2024 08:15 AM

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒரு சதவீதம் உண்மையாக இருந்தாலும் 100 சதவீதம் வெட்கக்கேடானது: கொல்கத்தா உயர் நீதிமன்றம்

கொல்கத்தா உயர் நீதிமன்றம்

கொல்கத்தா: மேற்கு வங்கம் சந்தேஷ்காலி சம்பவத்தில் சிறையில் உள்ள ஷேக்ஷாஜகான் ஜாமீன் மனு மீதான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் தலைமையிலான அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையும் குற்றம் சாட்டப்பட்ட ஷேக் ஷாஜகானின் ரூ.12.78 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது. ஷேக் ஷாஜகானின் நில அபகரிப்பு,பாலியல்் வன்கொடுமை தொடர்பானபதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட பாஜக தலைவர் பிரியங்கா திப்ரேவால் கூறியதாவது:

புகார்களை பதிவு செய்வதில் சந்தேஷ்காலி மக்களுக்கு பல சிரமங்கள் உள்ளன. நான் அங்கு நேரில்சென்றேன். அங்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை. சந்தேஷ்காலி மக்கள் கொல்கத்தா வந்து புகார் செய்வதில் சிரமங்கள் உள்ளது. அதனால் புகார்களை எளிதில் பதிவு செய்ய இணையதளம் வசதியை ஏற்படுத்தலாம். அல்லது மக்களின் புகார்களை கேட்க ஆணையம் ஒன்றை அமைக்கலாம்.

பெயர் தெரிவிக்க விரும்பாத பல பெண்கள்என்னிடம் புகார் அளித்தனர். சந்தேஷ்காலியில் தந்தையை பார்ப்பதற்காக சென்ற பெண், பட்டப்பகலில் கடத்தப்பட்டு ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆட்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் கூறியதாவது: பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என மேற்கு வங்க அரசு கூறுகிறது. ஆனால், இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஒட்டு மொத்த மாவட்ட நிர்வாகமும், ஆளும் கட்சியும் 100 சதவீதம் பொறுப்பேற்க வேண்டும். குற்றச்சாட்டில் ஒரு சதவீதம் உண்மையாக இருந்தாலும், அது 100 சதவீதம் வெட்கக்கேடானது.

குற்றச்சாட்டுக்கு ஆளான ஷேக்ஷாஜகான் 55 நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். நீங்கள் கண்ணை முடிக் கொள்வதால், உலகம் இருண்டு விடுவதில்லை. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

இதற்கு பதில் அளித்த ஷாஜகான் வழக்கறிஞர், ‘‘ஜாமீன் மனு நிலுவையில் இருந்ததால், தலை மறைவாக இருக்கும்படி எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது’’ என்றார். இதையடுத்து ஷேக் ஷாஜகான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x