Published : 03 Apr 2018 08:15 AM
Last Updated : 03 Apr 2018 08:15 AM
டெ
ல்லியும் மும்பையும் தூதரக உறவு இல்லாத தனித்தனி ராஜ்யங்கள் போன்றவை. டெல்லி இந்திய அரசியலையும் மும்பை இந்திய பொருளாதாரம், நிதி உலகத்தையும் பிரதிபலிக்கின்றன.
இந்தியாவின் நிரந்தர ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வந்த கடந்த 1989-ம் ஆண்டு முதல் பார்த்தால், டெல்லி 8 பிரதமர்களைப் பார்த்துவிட்டது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மும்பைக்கு கவலையில்லை. அதற்கு எல்லா தந்திரமும் வழிமுறைகளும் தெரியும். ஆட்சி மாறும் வரை காத்திருக்கும் பொறுமையும் அதற்கு உண்டு. அதனால் ஆட்சி விவகாரத்திலோ அல்லது ஆட்சி மாற்றத்திலோ மும்பை அதிகம் தலையிடுவது இல்லை.
2011-ம் ஆண்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்சி மாற்றம் கொண்டுவர முடிவு செய்தன. அதற்கு முக்கியமான 3 காரணங்கள் இருந்தன. தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான, விரைந்து செயல்படக் கூடிய அரசு வேண்டும் என விரும்பினர். இரண்டாவதாக, முஸ்லிம்களை அடக்கி கட்டுப்படுத்த விரும்பினர். மூன்றாவதும் மிகவும் முக்கியமானதுமான விஷயம், அதற்கான வாய்ப்பு பாஜக வடிவில் இருந்தது.
மோடியை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டன. டெல்லியை ஆள மோடி தான் சரியான ஆள் என மும்பை நினைத்தது. மோடி வெற்றி பெற்றதும் கொண்டாடிக் களித்தது மும்பை. ஆனால், அந்தக் கொண்டாட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பின்னும் சந்தேகமும் பயமும் தான் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை பெரிய அளவில் எந்த ரெய்டும் நடக்கவில்லை. இருந்தாலும் ஏன் இந்த பயம்?
நரேந்திர மோடி வாக்குக் கொடுத்த அரசு அல்ல இது. குஜராத்தில் வளர்ச்சியை ஏற்படுத்திய மோடியும் அல்ல இவர். மோடி அரசில் ஒரே நல்ல விஷயம் யாரும் லாபி செய்து ஆதாயம் தேட முடியாது. பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அது பிடிக்கவில்லை. குஜராத்தில் முதல்வராக இருந்தபோது செய்தது போல் பெரிய மனதுடன் தங்களை இரு கரம் நீட்டி வரவேற்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் எங்கு ஓட்டு இருக்கிறதோ அங்கு தனது அரசியலை மாற்றிக் கொண்டார் மோடி.
வருமான வரித் துறையினருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட அதிகாரங்கள் கிடைத்தது. மோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்காக வாரி வழங்கிய தொழிலதிபர்களை கேட்டாலே, `வரி தீவிரவாதம்' தாங்க முடியாத அளவுக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள். சிஐஐ, ஃபிக்கி, அசோசேம் போன்ற தொழில்துறை சார்ந்த சங்கங்களுக்கும் எந்த மரியாதையும் இல்லை.
எங்குமே கடன் வாங்க முடியவில்லை என்பதுதான் இந்திய நிறுவனங்களின் மிகப் பெரிய பிரச்சினை. இதற்கு அரசு மட்டுமே காரணம் இல்லை. கடந்த 2009 முதல் 12 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கொடுத்த பெரும்பாலான கடன்கள் வாராக் கடன்களாக மாறியதுதான் காரணம்.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பே இந்த பிரச்சினை தெரிய வந்தும் அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு நடுவில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. முதலில் ரிசர்வ் வங்கியின் தலைமையில் மாற்றம். அடுத்து பணமதிப்பு நீக்க அதிர்ச்சி. இந்தக் குழப்பம் தீர்வதற்குள் ஜிஎஸ்டி. வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைக்கு தீர்வு எடுக்கும் நடவடிக்கை அரசின் கடைசி ஆண்டுக்கு தள்ளப்பட்டு விட்டது.
பெரிய நிறுவனங்கள் நல்ல லாபத்துடன் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்த நேரத்தில் தொழிலதிபர்கள் அச்சத்துடன் இருப்பது சரியல்ல. நல்ல நிலையில் இருந்த ஸ்டீல் துறையும் சிமென்ட் துறையும் சரியில்லை. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துள்ள 12-க்கும் மேற்பட்ட ஸ்டீல் நிறுவனங்களின் விற்பனை மூலம் வங்கிகளுக்கு கடன் பாக்கி வசூலாகப் போகிறது. இதே நேரம் 21 பொதுத் துறை வங்கிகளில் 12 வங்கிகள் நலியும் நிலையில் உள்ளன. வங்கிகள் முதல் ரிசர்வ் வங்கி வரை கெடுபிடி அதிகரித்து விட்டது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாக்கியை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் கடன்களை மறுகட்டமைப்பு செய்யக் கூடாது என்றும் திவால் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி உட்பட யாரும் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.
பெரிய பணக்கார தொழிலதிபர்களின் பயம் எல்லாம் திவால் நடைமுறை இல்லை. போலீஸ்தான். யார் வீட்டிலும் ரெய்டு நடக்கவில்லை. யார் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படவில்லை. ஆனால் பொருளாதார குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாக மாற்றப்பட்டதால் விஜய் மல்லையாவுக்கும் பிறகு நிரவ் மோடி, மேஹுல் சோக்ஸிக்கு ஏற்பட்ட நிலைமை தொழிலதிபர்களுக்கு கசப்பான உணர்வை ஏற்படுத்தி விட்டன.
தற்போது மிகவும் மோசமான விஷயம் பொதுத்துறை வங்கிகளின் சிக்கல்தான். தேர்தலுக்கு முன்பாக தனியார் துறையில் ஏதாவது பெரிய மோசடியைக் கண்டுபிடித்து தனது ஊழல் எதிர்ப்பு மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தில் மோடி அரசு உள்ளது. அடுத்து யார் கழுத்தில் கத்தி விழுமோ என பயந்த நேரத்தில்தான் ஐசிஐசிஐ வங்கி - வீடியோகான் மோசடி விவகாரம் வெளியாகி இருக்கிறது. இந்த மோசடி குறித்த 2016-ம் ஆண்டு வெளியான கடிதம் ஒன்று பல வாரங்களாகவே வாட்ஸ்-அப்பில் வலம் வந்தது. விவகாரத்தை அரசே கையில் எடுத்துவிட்டதால் இனி அவரவர் கருத்தை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT