Published : 03 Apr 2024 06:07 PM
Last Updated : 03 Apr 2024 06:07 PM

மருந்துகளின் விலை 12% வரை உயர்வா? - மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: ஏப்ரல் முதல் மருந்துகளின் விலை 12% வரை குறிப்பிடத்தக்க உயர்வைக் காணும் என்று வெளியான செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024 ஏப்ரல் முதல் மருந்துகளின் விலை 12% வரை குறிப்பிடத்தக்க உயர்வைக் காணும் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வால் 500-க்கும் மேற்பட்ட மருந்துகள் பாதிக்கப்படும் என்றும் இந்தச் செய்திகள் கூறுகின்றன. இத்தகைய செய்திகள் தவறானவை, தவறாக வழிநடத்துபவை, தீங்கிழைப்பவை.

மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை (டி.பி.சி.ஓ) 2013 விதிகளின்படி, மருந்துகள் அட்டவணைப்படுத்தப்பட்டவை மற்றும் அட்டவணையிடப்படாதவை என வகைப்படுத்தப்படுகின்றன.

மொத்த விலை குறியீட்டு எண் காரணியான (+) 0.00551% அடிப்படையில், 782 மருந்துகளுக்கான தற்போதைய உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போதுள்ள உச்சவரம்பு விலை 31.03.2025 வரை தொடரும்.

ரூ.90 முதல் ரூ.261 வரையிலான உச்சவரம்பு விலையில் 54 மருந்துகளுக்கு ரூ.0.01 (ஒரு பைசா) என்ற சிறிய அளவு விலை உயர்வு இருக்கும். அனுமதிக்கப்பட்ட விலை உயர்வு சிறியது என்பதால், நிறுவனங்கள் இந்த உயர்வைப் பெறலாம் அல்லது பெறாமல் போகலாம்.

எனவே, 2024-25 நிதியாண்டில், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் மருந்துகளின் உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது. திருத்தப்பட்ட விலைகள் 2024 ஏப்ரல் 1 முதல் அமலாகும். இதன் விவரம் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளத்தில் www.nppaindia.nic.in கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x